“துருக்கியில் ஏற்பட்ட அழிவுகள் பூமியதிர்ச்சியாலல்ல, தரமற்ற கட்டடங்களால் ஆனவையே!”

திங்களன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் விளைவால் துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,500 ஆகியிருக்கின்றன. இஸ்தான்புல்லில் 1999 இல் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் இறந்தவர்கள் தொகையான 18,000 இதுவரை இப்படியான இயற்கை அழிவால் துருக்கியில் அதிகம் இறந்தவர்கள் ஆக இருந்தது. பூமியதிர்ச்சி தாக்கிய முக்கிய பகுதிகளில் பல நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் முழுசாக இடிந்து விழுந்திருக்கின்றன. இறப்புகளின் எண்ணிக்கையும் அங்கங்களை இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் சமயத்தில் 2018 இல் அரசு கொண்டுவந்த பாதுகாப்பான கட்டடங்கள் பற்றிய சட்டங்கள் பெரும்பாலானோரால் உதாசீனப்படுத்தப்பட்டிருப்பது பற்றிய விபரங்களும் வெளியாகிச் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றன.

தரைமட்டமாகியும், அரைகுறையாக அழிந்தும் கிடக்கும் குடியிருப்புக் கட்டடங்களின் கீழே உயிருடன் எவரையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலும் அற்றுப் போயிருக்கிறது. இத்தனை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கட்டட இடிபாடுகளுக்குள் உயிருடன் வாழும் சாத்தியமில்லை என்கிறார்கள் மீட்புப் பணியினர். ஆயினும், இடைவிடாமல் தமது பணியில் ஈடுபட்டிருக்கும் அவர்களால் அவ்வப்போது உயிருடன் சிலர் மீட்கப்படும் அதிசயமும் நடந்துவருகிறது.

1999 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டடங்கள் பலமாக இல்லாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துருக்கிய அரசை அதுபற்றிச் சிந்திக்கவைத்திருந்தது. எனவே, அடிக்கடி பூமியதிர்ச்சிகள் ஏற்படும் நாடாகையால் கட்டடங்கள் நில அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாக இருக்கவேண்டுமென்று புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பூமியதிர்ச்சிக்கான சாத்தியம் அதிகம் என்று கணிக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டடங்கள் கட்டும் சட்டங்கள் பிரத்தியேகமாகக் கடுமையாக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் துருக்கியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் வேகமாகப் பல நகரங்கள் ஆங்காங்கே முளைத்தன. அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல கட்டடங்கள் ஒழுங்கான திட்டமிடலின்றியே அங்கீகரிக்கப்பட்டன. 2018 இல் தேர்தல் நடந்தபோது அதுபற்றிய விபரங்கள் வெளியாகின. தேர்தல் சமயத்தில் பிரச்சினைகளைக் கிண்டி விமர்சனங்கள் உண்டாகாதிருக்க அரசு சட்டமீறலில் ஈடுபட்ட கட்டடங்களின் நிறுவனங்கள், உரிமையாளர்களுக்குப் பொதுவான மன்னிப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

துருக்கியிலிருந்து மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் கட்டடப் பொறியியலாளர்கள் பூமியதிர்ச்சிக்கும் கிஞ்சித்தும் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்து சிதறிய கட்டடங்களின் அமைப்புகள், அவற்றில் பாவிக்கபட்ட மூலப்பொருட்கள் பற்றி விமர்சித்து வருகிறார்கள். ஜனாதிபதி எர்டகான் அதுபற்றிய விமர்சனத்துக்குப் பதிலளிக்கையில், “அவையெல்லாம் அர்த்தமற்றவைகள்,” என்று பதிலளித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *