கேரள அரசு பாடசாலைகளில், “போடா, போடி…” போன்ற சொற்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருக்கிறது.

ஏற்கனவே தனது பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களை, “சேர், மேடம்” ஆகிய சொற்களால் விழிப்பதைத் தடைசெய்திருக்கும் கேரளாவில் பாடசாலைகளுக்குள் ஆசிரியர்கள் மாணவர்களை மரியாதையின்றி “போடா, போடி” போன்ற சொற்களைப் பாவிப்பதைத் தடைசெய்யவிருக்கிறது. அரசாங்கம் அத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை மாணவர்களை நோக்கிப் பாவிக்கும் ஆசிரியர்கள் தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“சேர், மேடம்” போன்ற சொற்கள் பாலின நடுநிலையாக இல்லாமையாலும் அவை மாணவர்களை நோக்கி அதிகாரத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன என்பதாலும் அவற்றைப் பாவனையிலிருந்து அகற்றும் முடிவை கேரளாவின் பாலர்கள் பாதுகாப்பு திணைக்களம் எடுத்திருந்தது. அச்சொற்களுக்குப் பதிலாக “டீச்சர்” என்றே ஆண், பெண் ஆசிரியர்களை விழிக்கும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

“போடா, ஏடா, போடி” சொற்களை மாணவர்கள் பாவிக்கும்போது அவைகளில் நெருக்கமும், அன்புப்பிணைப்பும் சில சமயம் இருப்பதுண்டு. ஆயினும் ஆசிரியர்கள் அவற்றைப் பாவிக்கலாகாது என்ற கட்டுப்பாடு வரும்போது வகுப்பறைகளில் அச்சொற்களுக்குத் தடை விதிக்கப்படும். எதிர்காலச் சமூகத்துக்கான முன்மாதிரிகையாக ஆசிரியர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று கேரள கல்வியமைச்சு குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *