தங்கக் கடத்தில் விவகாரத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி.

கேரளாவின் ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் பினராயி விஜயன் தான் எமிரேட்ஸிலிருந்த இந்தியத் தூதுவராலயத்தின் பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ் சரீத் ஆகியோரின் உதவியுடன் தங்கக் கடத்தல்களிலும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதிலும் ஈடுபட்டிருந்தது என்ற விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. விசாரிக்கப்பட்டு வரும் அந்தக் குற்றங்களின் முக்கிய புள்ளியான ஸ்வப்னா சுரேஷ் அவ்விபரங்களை ஊடகங்களுக்கு வெ ளியிட்டது முதல் கேரளாவில் அரசியல் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஆகக்குறைந்தது நான்கு கேரளா அமைச்சர்கள் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டியிருக்கிறார்கள். – வெற்றிநடை (vetrinadai.com)

2020 இல் கையும் களவுமாகச் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களால் இக்குற்றங்கள் அம்பலத்துக்கு வந்தன. திருவனந்தபுரத்திலிருக்கும் எமிரேட்ஸ் தூதுவராலயக் காரியாலயமே அக்கடத்தல்களுக்காகப் பாவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசின் ராஜதந்திர விவகாரங்களுக்கான தபால் பைகளில் மாதம் சுமார் 30 கிலோவுக்குக் குறையாத தங்கத்தை ஒரு வருடத்துக்கும் அதிகமாக இந்தக் குழுவினர் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. 

கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவளது கூட்டாளிகளை விசாரித்ததில் அவர்களுடைய தொடர்புகள் கேரள முதலமைச்சரின் அலுவலகம் வரை எட்டியிருந்தது வெளிச்சமாகியது. கைது செய்யப்பட்ட பலரில் முதலமைச்சர் பினராயி விஜயனின் காரியதரிசியும் ஒருவராகும். அரசியல் அழுந்தங்களுக்கிடையே இந்தக் கடத்தல் குழு பற்றிய விபரங்கள் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

முதலமைச்சருக்கும் கடத்தல் குழுவுக்கும் நெருக்கமான ஊடகவியலாளர் சிராஜ் கிரண் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு கடத்தலில் பினராயி விஜயனின் ஈடுபாடுகள் பற்றி வெளியிடக்கூடாது என்று மிரட்டியதாகவும் ஸ்வப்னா சுரேஷ் குறிப்பிட்டிருக்கிறார். தன்னை சிராஜ் கிரண் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நடந்த சம்பாஷணைகளை அவர் ஊடகங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 

வெளிவந்திருக்கும் விபரங்களிலிருந்து பினராயியும் அவரது காரியதரிசி கொடியேறி பாலகிருஷ்ணனும் கறுப்புப்பணத்தை அமெரிக்காவுக்கு அனுப்புவதில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. அதற்காக அவர்கள் கேரளாவில் நிறுவப்பட்ட “நம்பிக்கையாளர்களின் திருச்சபை” என்ற தேவாலயத்தினருடன் சேர்ந்து செயற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

குறிப்பிட்ட திருச்சபையின் அதிமேற்றிராணியார் கே.பி யோகண்ணன் ஆசியாவிலேயே மிகப்பணக்காரரான திருச்சபைத் தலைவராகும். பல இருட்டான பொருளாதார விடயங்களில் ஈடுபட்டிருக்கும் கே.பி.யோகண்ணனின் சொத்து மதிப்பு சுமார் 175 மில்லியன் டொலர்களாகும். அவரது பல பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய சந்தேகங்களால் இந்திய வருமானவரித் திணைக்களம் அவரது சொத்துக்கள் மீதும், பொருளாதார நடவடிக்கைகள் மீதும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டிருக்கும் ஆதாரங்களால் கேரளாவின் பகுதிகளில் பினராயி விஜயனைப் பதவி விலகும்படி கேட்டுப் போராட்டங்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. அவற்றைத் தனது கட்சி மூலம் மறுத்துவரும் கேரள மார்க்ஸ்ஸிஸ்ட் கட்சியினர் எதிர்ப்புக்களெல்லாம் தமக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளே என்று குறிப்பிட்டு தமது பங்குக்கும் ஊர்வலங்களை நடத்திவருகின்றனர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *