“இறக்குமதிகளுக்குத் தடை தொடருமானால் எங்கள் நிறுவனங்கள் சிறீலங்காவைவிட்டு வெளியேறும்,” என்று எச்சரிக்கிறது ஜேர்மனி.
சிறீலங்காவின் அரச கஜானாவில் அன்னியச் செலாவணிக்கு ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கு அரசு தடை போட்டிருக்கிறது. அத்தடையால் பாதிக்கப்பட்டு வரும் சிறீலங்காவில் இயங்கும் ஜேர்மனிய நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறும் ஆபத்து நிலவுவதாக ஜேர்மனியத் தூதுவர் ஹோல்கர் சூபர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட்ட பலவற்றை விற்கும், தயாரிக்கும் நிறுவனங்கள் சிறீலங்காவில் செயற்படுகின்றன. இறக்குமதித் தட்டுப்பாடு அவர்களைக் கணிசமாகப் பாதித்து வருவதால் அவர்கள் தொடர்ந்தும் அங்கே செயற்படுவது பற்றி சோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் இரண்டு வருடங்களுக்கு இதுவே தொடருமானால் அங்கிருந்து அவர்கள் வெளியேறிவிடும் அபாயம் இருக்கிறது என்றார் சூபர்ட்.
அதே சமயம் ஜேர்மனியின் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சபர் சிறீலங்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார். மேலுமொரு வாரத்தில் ஐ.நா-வின் பொதுச்சபையில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கவிருக்கும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி சிறீலங்காவிடம் கோரியிருக்கிறார். அதற்காக அவரும் தூதுவர் சூபர்ட்டும் சிறீலங்கா அரசின் முக்கியத்தவர்கள் சிலரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேயிடமும் இதுபற்றி அவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
அணிசேரா நாடாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சிறீலங்கா ரஷ்யாவுடனான தொடர்புகளை வழக்கம்போலக் காப்பாற்ற விரும்புகிறது. கடந்த வருடம் இதே போன்ற தீர்மானமொன்றில் ரஷ்யாவுக்கெதிராக வாக்களிக்காமல் சிறீலங்கா ஒதுங்கிக்கொண்டது.
சாள்ஸ் ஜெ. போமன்