மேற்கு ஜேர்மனியில், பெல்ஜியத்தில் பல நாட்களாகக் கடும் மழை, வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல நாட்களாக விடாமல் பெய்துவந்த மழை, வெள்ளப் பெருக்குகளை ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கிறார்கள், அதேயளவு பேரைக் காணவில்லை. பக்கத்து நாடான பெல்ஜியத்திலும் நால்வர் வெள்ளத்துக்குப் பலியாகியதாகத் தெரிகிறது.

தொடர்ந்தும் மழை பலமாகப் பெய்துகொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை வரை மழை தொடருமென்று தெரிகிறது. சில அணைக்கட்டுகள், முக்கிய வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் தலைக்கு மேலிருப்பதால் ஜேர்மனிய அரசு 200 இராணுவ வீரர்களை உதவிக்கு வரும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது. இது போன்ற பலமான மழையும், வெள்ளமும் கால் நூற்றாண்டுக்கு மேலாக அங்கே உண்டாகியிருக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

Rheinland-Pfalz மாநிலத்தில் இப்படியான கால நிலை நூறாண்டாக உண்டாகியிருக்கவில்லை. சுமார் 70 பேர் அங்கே காணாமல் போயிருப்பதாகப் பொலீசார் தெரிவிக்கிறார்கள். காற்றடித்த படகுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் அவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்களா அல்லது விடுமுறையில் வேறெங்காவது சென்றிருக்கிறார்களா என்று தெரியவில்லை. 

ஜேர்மனியின் தலைவர் அஞ்செலா மெர்க்கல், அவருக்கடுத்ததாகத் தலைமை ஏற்கவிருக்கும் ஆர்மின் லாச்செட் ஆகியோர் இறந்துபோனவர்களுக்காக அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இப்படியான அனர்த்தங்கள் மேலும் அதிக எண்ணிக்கையிலும், மோசமாகவும் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஆர்மின் லாச்செட். ஐரோப்பிய அளவில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் படு வேகமாகப் பல மாற்றங்களைச் செய்து முடிந்தவரை அம்மாற்றங்களின் அழிவுகளுக்கு முட்டுக்கட்டை போடவேண்டுமென்று அவர் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *