ஐநூறு மில்லியன் எவ்ரோக்கள் தண்டம் கட்டும்படி பிரான்ஸ் அரசு கூகுளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

பிரெஞ்சு ஊடகங்களின் தயாரிப்புக்களை கூகுளில் மீண்டும் பிரசுரிப்பதற்கான கட்டணங்களைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தில் ஆவன செய்யும்படி பிரான்ஸின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளைக் கண்காணிக்கும் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. கூகுள் அதைச் செய்யாமலேயே தாம் கொடுக்கும் கட்டணத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பரஸ்பர நம்பிக்கையுடன் அவர்களுடைய தயாரிப்புக்களை மீள் வெளியீடு செய்துகொண்டிருந்தது.

“அரச திணைக்களமொன்று நிறுவனங்களுக்கு உத்தரவிடும்போது அவைகள் நிறைவேற்றப்படவேண்டுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதைச் செய்யாமல் விட்டதன் மூலம் கூகுள் தவறிழைத்திருக்கிறது,” என்கிறார் அத்திணைக்களத்தின் உயரதிகாரி இஸபெல்லா டி சில்வா.

“கூகுள் தமக்கும் ஊடக நிறுவனங்களுக்குமிடையே ஒரு நியாயமான ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. நாம் அரசின் உத்தரவை உதாசீனம் செய்யும் நோக்கத்தில் இருக்கவில்லை,” என்று கூறும் கூகுள் நடந்ததை மறந்துவிட்டுத் தாம் செய்யவேண்டியதைச் செய்யத் தயார் என்கிறது.

 கூகுள் நிறுவனத்துக்கு அரசு மீண்டும் இரண்டு மாத அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் அவர்கள் ஊடக நிறுவனங்களுடன் மறு வெளியீடு செய்வது பற்றிய ஒரு ஒப்பந்தத்தை உண்டாக்கிக்கொள்ளாத பட்சத்தில் தினசரி 900 000 எவ்ரோக்கள் தண்டம் கட்டவேண்டியிருக்கும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

டிஜிடல் ஊடகங்கள் தாம் மறு வெளியீடு செய்யும் சாதாரண ஊடகங்களுக்கான விலையைக் கொடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் முடிவுசெய்திருந்தது. அதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸின் 121 ஊடக நிறுவனங்களுக்கு அவர்களுடைய தயாரிப்புக்களைப் பாவிப்பதற்கு விலையாக மூன்று வருடங்களுக்கு 76 மில்லியன் எவ்ரோக்கள் தரலாம் என்று கூகுள் முன்னர் அறிவித்திருந்தது. அது மிகவும் மலிவான தொகையென்று கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *