பாரிஸின் வெற்றி வளைவுக்கு புத்தாடை போர்த்திப் புது எழில்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஓவியர் ஒருவர் விரும்பிய கனவு இப்போது பலித்திருக்கிறது. பல்கேரியாவில் பிறந்த கிறிஸ்ரோ (Christo) என்ற ஓவியர்1961 இல் பாரிஸின் Arc de Triomphe என்கின்ற வளைவுக்கு முழுவதுமாகத் துணி போர்த்திப் பார்க்க விரும்பினார்.பின்னர் அவர் இறந்து விட்டார்.

ஆயினும்அவரது விருப்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. பாரிஸின் முக்கிய நினைவிடங்களில் ஒன்று Arc de Triomphe என்கின்ற வெற்றி வளைவு.பாரிஸ் வாசிகள் மட்டுமன்றி உலகம் எங்கும் இருந்து வரும் உல்லாசப்பயணிகளும் பார்க்கத் தவறாத சுற்றுலா மையங்களில் ஈபிள் கோபுரத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது Arc de Triomphe.

பிரமாண்டமானதும் கம்பீரமானதுமான அந்த வெற்றி வளைவின் அடித்தளத்தில் போரில் உயிர்நீத்த – பெயர் தெரியாத-படை வீரர் ஒருவரது கல்லறை உள்ளது. அங்கு அணையாத தீபம் ஒன்று எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கும். அதனால் அந்த நினைவிடத்தை பாரிஸ் தமிழர்கள் “அணையா விளக்கு” என்று அழைப்பர்.

பாரிஸின் வெற்றி வளைவு நேற்று முதல் வெள்ளி-நீலம் நிறத்திலான துணியின் மூலம் (silver blue fabric)முழுவதும் போர்த்தி மூடி புத்தாடை அணிந்தது போன்று எழிலாகக் காட்சியளிக்கிறது.

நினைவிடங்களையும் பழமை வாய்ந்த கட்டடங்களையும் துணி அல்லது பொதி செய்யும் கடதாசிகளால் போர்த்தி (wrapping) வண்ணமயமாக மாற்றுகின்ற ஒருவித அதிசய சித்திரக் கலை வடிவம் அது.பல நாடுகளில் முக்கிய கட்டடங்கள் இவ்வாறு துணிபோர்த்தி அலங்கரிக்கப்பட்டுள்ளன. பாரிஸ் நகரில் அமைந்துள்ள Ponf Neuf எனப்படும் பாலம்1985 ஆம் ஆண்டில் இவ்வாறு துணியால் போர்த்தி காட்சிக்கு விடப்பட்டது.

மீள் சுழற்சியில் பயன்படுத்தக் கூடிய துணி போன்ற அழகிய பிளாஸ்ரிக் படங்கினால்(recyclable plastic wrapping) வெற்றிவளைவு முழுவதும் அதன் வடிவம் குலையாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஓவியர் கிறிஸ்ரோவின் விருப்பத்தை அவரது உறவினர் ஒருவர் சுமார்அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு 14 மில்லியன் ஈரோ செலவில் நிறைவேற்றியுள்ளார். சுமார் 2,500 சதுர மீற்றர் பரப்பளவு துணி வவளைவைச் சுற்றிவரப் போர்க்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதுக் கோலம் பூண்டுள்ள வெற்றி வளைவை அதிபர் எமானுவல் மக்ரோன் தனது துணைவியார் சகிதம் சென்று திறந்து வைத்தார். நேற்று நடைபெற்ற அந்தநிகழ்வில் பாரிஸ் நகர மேயர் ஆன்கிடல்கோ மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ரோஸ்லின் பட்ச்லொட்(Roselyne Bachelot) ஆகியோரும் கலந்து கொண்டனர்.”கிறிஸ்ரோவின் பைத்தியக்காரத்தனமான கனவு இன்று நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று மக்ரோன் அங்கு தெரிவித்தார். Arc de Triomphe எதிர்வரும் ஒக்ரோபர் 3ஆம்திகதி வரை இந்தப் புதிய அலங்காரத்துடன் காட்சிதரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *