துருக்கியில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் நாடு திரும்புகிறார்கள்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 45,000 பேர் இறந்ததாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பூமியதிர்ச்சியின் பல விளைவுகளில் ஒன்றாக துருக்கியப் பிராந்தியங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் தமது நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.
இவ்வருடத்தில் வெளியாகிய துருக்கியப் புள்ளிவிபரங்களின்படி சுமார் 3, 500, 000 சிரியர்கள் துருக்கியில் தம்மை அகதிகளாகப் பதிந்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் கணிசமானோர் இரண்டு நாடுகளின் எல்லைக்கருகேயிருக்கும் துருக்கிய நகரங்களில் வாழ்ந்து வந்தனர். பூமியதிர்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசியாந்தெப், ஹத்தாய் நகரங்களில் மட்டுமே சுமார் 800,000 சிரிய அகதிகள் வாழ்ந்துவந்தனர். அந்த நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் இடிந்துவிட்டதாலும், அழிவுகள் மோசமாக இருப்பதாலும் அகதிகள் துருக்கியில் தமது வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள்.
பூமியதிர்ச்சி ஏற்பட்ட பிராந்தியங்களின் எல்லைகள் நீண்ட காலமாகவே மூடப்பட்டிருந்தன. சிரியாவின் அரசுடனும், சிரியாவின் சில ஆயுத இயக்கங்களுடனும், அப்பகுதியை அடுத்துச் செறிந்து வாழும் குர்தீஷ் மக்கள் மீதும் துருக்கிய அரசு போர் புரிந்தே வந்திருந்தது. அவ்வெல்லைகளூடாக சிரியர்கள் நடமாட்டம் துருக்கியால் நிறுத்தப்பட்டிருந்தது. அவைகள் தற்போது சில நாட்களாகத் திறந்து அவற்றினூடாகத் துருக்கியிலிருந்து சிரியாவுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
எல்லைகள் திறக்கப்பட்டதாலும் தாம் அடைக்கலம் புகுந்த பிரதேசத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாலும் சிரியர்கள் பலர் தாம் முன்னர் வாழ்ந்த பகுதிகளை நோக்கித் திரும்பிச் செல்கிறார்கள். அவர்களில் பலர் சிரியாவில் தமது வீடுகள், உடமைகளைக் கைவிட்டுப் போரால் பாதிக்கப்பட்டதால் அகதிகளானவர்களாகும். எஞ்சியிருப்பது தாம் கைவிட்டுவிட்டு வந்த சொத்துக்களே என்பதால் மீண்டும் அப்பகுதிகளுக்கே குடியேறச் செல்வதாக அவர்களில் பலர் செய்தியாளர்களிடம் கூறிவருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்