மல்லியை பதுக்கிய நபர் கைது..!
மனித பாவனைக்கு உதவாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன தலைமையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளினால்,கல்முனை-03 அம்மன் கோயில் வீதியில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த 84875 கிலோ மல்லி மற்றும் 300 கிலோ நிறச்சாயம் (டை) என்பன பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலையை முற்றுகையிட்டனர்.
நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மனித பாவனைக்கு உதவாத மல்லி நிறச்சாயம் இட்டு விற்பனை செய்வதற்கு தயார் படுத்தபட்டு களஞ்சிய அறையில் பதுக்கி வைத்திருந்த மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,
44 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு குறித்த களஞ்சியசாலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு எச்சரிக்கையுடனான அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தாக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையுடன் இணைந்து இச்சுற்றி வளைப்பில் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரும்,புலனாய்வு பிரிவினரும் பங்கேற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை களஞ்சியப்படுத்தும் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.