பாரிஸ் சிறையில் துவாரம் தோண்டி தப்பிக்க முயன்ற இளம் பெண் கைதி.
தீவிரவாதச் செயல்களுக்காக விசாரிக்கப்பட்டு வந்த பெண் கைதி ஒருவர்சிறையில் இருந்து தப்பிச்செல்ல எடுத்தமுயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.
பாரிஸ் புறநகரப் பகுதிகளில் ஒன்றானVal-de-Marne மாவட்டத்தில் உள்ள Fresnes சிறைச் சாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாரிஸ் ஊடகங்கள்வெளியிட்ட தகவல்களின் படி, பெண்கைதி தனது சிறை அறையின் சுவரில் பெரிய துவாரம் ஒன்றைத் தோண்டிஅதன் வழியாக வெளியேறித் தப்பிச்சென்றுள்ளார். இன்று ஞாயிறு காலை நடைபாதைப் பகுதியில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து சிறைக் காவலர்கள் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் கிடைக்கக் கூடிய சிறு உபகரணங்களைப் பயன்படுத்தி சுவர்க் கற்களைச் சிறிது சிறிதாக அகற்றித் துவாரம் ஒன்றை உருவாக்கி அதன்வழியாக அவர் சிறையின் கீழ் தளத்துக்கு இறங்கியுள்ளார். சிறையில் பொருத்தப்பட்டுள்ள அசைவுகளைக் கண்காணிக்கும் கருவி(motion detector)அவரது நடமாட்டம் குறித்துக் காவலர்களை எச்சரிக்கை செய்ததாலேயே அவர் மீண்டும் சிக்க நேர்ந்துள்ளது.
தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய காரணத்தால் கைது செய்யப்பட்டிருந்த பிரஸ்தாப இளம் பெண், சிரியாநாட்டுக்குச் சென்று திரும்பியவர் என்றுதெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தற்சமயம் அவரை விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்துச் சிறையில் பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்ற சகல அறைகளிலும் விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.