ஜேர்மனியின் புதிய வானவில் அரசாங்கம் கஞ்சாப்பாவிப்பைச் சட்டபூர்வமாக அனுமதிக்கவிருக்கிறது.
எதிர்காலத்தில் ஜேர்மனியில் பிரத்தியேக கஞ்சாக் கடைகளில் அவை விற்கப்படும். அதன் மூலம் கஞ்சாவை வயதுக்கு வராதோர் பாவிப்பது தடுக்கப்படுவதுடன் அதன் தரமும் கண்காணிக்கப்படும். ஜேர்மனியில் புதியதாகப் பதவியேற்கவிருக்கும் சோஷியல் டெமொகிரடிக் கட்சியின் தலைமையிலான மூன்று கட்சிக் கூட்டணியினரிடையே இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
தற்போது ஜேர்மனியில் எவ்வளவு சிறிய அளவிலும் எவரும் கஞ்சாவைத் தம்மிடம் வைத்திருக்கவோ, பாவிக்கவோ கூடாது. சிறிய அளவில் அதை வைத்திருப்பவர்களை பொலீஸ் அடையாளம் காணும் பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்யாமல் கஞ்சாவைப் பறிமுதல் செய்வதுடன் விட்டுவிடுகிறது.
சோஷியல் டெமொகிரடிக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கவிருக்கும் சிறிய கட்சிகளான De Gröna, FDP ஆகிய கட்சிகள் கஞ்சாவைப் பாவிப்பதைச் சட்டபூர்வமாக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகின்றன. அவ்விடயம் ஒரு ஆய்வுக் குழுவிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்டதில் அப்படியான ஒரு நகர்வு அரச கஜானாவுக்கு வருடாவருடம் 4,7 பில்லியன் எவ்ரோக்களை வருமானமாகக் கொடுப்பதுடன் சுமார் 27,000 வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கும் என்ற விபரம் வெளியானது.
அத்துடன் ஜேர்மனியிலேயே விளைவிக்கப்பட்ட கஞ்சா முதல் முதலாகக் கடந்த கோடையில் மருந்துக் கடைகளுக்கு விற்பனைக்காக வந்தது. மருத்துவர்களின் ஆலோசனையுடன் மருத்துவத்துக்காக அதைக் குறிப்பிட்ட நோயாளிகள் பாவிக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. 2017 ம் ஆண்டிலிருந்தோ வலி நிவாரணியாக கஞ்சாவைப் பாவிப்பதை ஜேர்மனி அனுமதித்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்