கும்ப்ரே வேய்யாவின் சீற்றம் தொடர்வதால் புதிய நகரம் கட்டவேண்டிய நிலை உண்டாகியிருக்கிறது.
ஸ்பெயினின் கானரி தீவுகளில் ஒன்றான லா பால்மாவில் வெடித்துச் சீற ஆரம்பித்த எரிமலை தொடர்ந்தும் கொதிக்கும் குழம்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது. பூமியதிர்ச்சிகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தச் சுற்றுலாத் தீவின் விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் விழித்தெழுந்த அந்த எரிமலையின் சீற்றம் எப்போது முடியுமென்பதைப் புவியியல் அறிஞர்களால் கணிக்க முடியாமலிருக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் 24 மணித்தியாலத்தினுள் 300 க்கும் அதிகமான பூமியதிர்ச்சிகள் அப்பிராந்தியத்தில் உண்டாகியிருந்தன.
வெளியேறும் எரிமலைக் குழம்பு தீவின் வெவ்வேறு பகுதிகளை நோக்கிப் பரந்துகொண்டிருப்பதால் மேலும் சில குடியிருப்புக்களிலிருந்து மக்களை வெளியேற்றவேண்டியதாயிற்று. பல்லாயிரக்கணக்கான கட்டடங்களை எரிமலைக்குழம்பு ஆட்கொண்டுவிட்டது. இதுவரை 7,000 பேர் தமது வாழுமிடங்களை இழந்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையில் உதவுவதென்று ஸ்பெயின் அரசின் சகல திணைக்களங்களும் திட்டமிட்டு வருவதாக அரசின் பேச்சாளர் குறிப்பிட்டார். வீடிழந்தவர்கள் மட்டுமன்றி, எரிமலைச் சீறலினால் ஏற்பட்டிருக்கும் சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீர்வுகள் காணவேண்டிய நிலையில் இருக்கிறது அரசு. பூமியதிர்ச்சிகள் எத்தனை காலம் தொடரும், எரிமலைச் சீற்றம் என்று நிற்கும் என்று தெரியாத நிலையில் பாதிக்கப்பட்டோருக்காக ஒரு புதிய நகரத்தை நிர்மாணிப்பது பற்றி ஸ்பெயின் அரசு சிந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்