பிரான்ஸில் ஒரே நாளில் 30 ஆயிரம் தொற்றுக்கள் !
நாடெங்கும் பாடசாலைகளில்6ஆயிரம் வகுப்பறைகள் மூடல்!
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார்.கேள்விநேரத்தின் போது உறுப்பினர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த கோடை விடுமுறை காலத்துக்குப்பிறகு எதிர்பாராத உச்ச அளவு இது என்றும் நாட்டில் ஐந்தாவது வைரஸ் தொற்றலை தோன்றியிருப்பதை இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.பொதுச் சுகாதாரப் பகுதியினர் வெளியிட்டிருக்கும் தரவுகள் கடந்த ஒரு நாள்தொற்று எண்ணிக்கை 30,454 என்றுதெரிவித்துள்ளன.
இதேவேளை, கல்வி அமைச்சர் வெளியிட்டிருக்கின்ற தகவலின்படிதொற்றுக் காரணமாக நாடெங்கும்சுமார் ஆறாயிரம் வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. கடந்த சிலநாட்களாக பாடசாலைகளில் தொற்று அதிகரித்துவருவதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தி உள்ளது.
நாடு வைரஸின் ஐந்தாவது அலையைச் சந்தித்திருப்பதால் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதை வயது வரம்பு இன்றி வளர்ந்தோர் அனைவருக்கும்விரைவாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு சுகாதாரத் தரப்புகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வரும் நத்தார் திருநாளை அண்மித்த நாட்களில் நாட்டின் மருத்துவமனைகள் நோயாளர்களால் அழுத்தங்களைச் சந்திக்க வேண்டிவரலாம் என்று சுகாதாரஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியலாளர் குழு கணிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் ஜீன் காஸ்ரோ தொற்றுக்கு இலக்கானதை அடுத்துஅவரோடு தொடர்புபட்டிருந்த காரணத்துக்காக சிரேஷ்ட அமைச்சர்கள் பத்துப்பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எவருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிரமான பரவலை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டம் நாளை புதன் கிழமை அதிபர் எமானுவல் மக்ரோன் தலைமையில் நடைபெறவுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.