வியப்பின் குன்றில் நில்.!

தோற்று கடந்த நொடிகள்
விதைத்து விட்டுப்போகும்
வெற்றியின் வெளிச்சத்தை பார்க்க கற்றுக்கொள்..!

உன்னை
கொல்லும் ஆயுதமும்,
வெல்லும் ஆயுதமும்
உன்னிடமே உள்ளது.!

கொல்லும் ஆயுதத்தை
கொலை செய்துவிட்டு _
வெல்லும் ஆயுதத்தை
விளைச்சல் செய்து விடு.!

எதையும்
தெரிந்து கொள்வதை விடவும்
புரிந்துகொண்டு சார்வாகனாக இரு..!

மூளை நிலத்தில்
அறிவு மூங்கிலை விதை.!

ஒரு நொடிக்கும் இன்னொரு நொடிக்கும் இருக்கும் இடைவேளையில்
ஆகாயத்தை நிரப்பப் பழகு..!

தொடு வானத்தைத் தொட்ட
முதல் ஆள் நீயென்று
புது சகாப்தம் படைத்துவிடு.!

தேய்மான சந்தையில்
புதிய யுக்திகள்தான் கோல்பிடிக்கும் ! _
அழுக்கு மூளையை
தினமும் துவைத்து துவைத்து
புதிய யுக்தியை பிரசவித்திடு..!

இறங்குவரிசை மழை
இவ்வுலகிற்கு தழை.! _ உன்
இறங்கும் வினை
ஏறுதலின் கணை.!

உனக்குள்ளே மடிந்து
புதிய உறுப்புகளுடனும்,
புதிய தெளிவுகளுடனும்
புது அவதாரம் எடு..!

பீலி கண்களை
சூரியக்கடலில் கழுவி
வியப்பின் குன்றில் நில்..!

புறக்கணிப்பு புழுதிகளை
நதிகளாக்கி நீச்சலடி..!

அவமான அமிலங்களை
ஆகாயமாய் மாற்றி
நிலவாய் ஒளிர்திடு..!

சுவடற்ற பிணங்களின்
சுருக்கு வலையில் சிக்காமல்
ஈடற்ற நாயகர்களை முந்தி விடு.!

காலி படகுகளின்
கந்தல் பேச்சுக்களை
காது குடைந்து கடந்துவிடு.!

இறக்கைகள் தரித்து
வரையறை வேலிக்குள்
வாழ்வை சிறைப்படுத்துவோருடன்
கைகுலுக்கிக் கொள்ளாமல்
வேலியைக் கடந்துவிடு..

நீ பயணிக்கும் துறையில்
பள்ளத்தாக்கு மந்தைகளின்
பந்தியில் அமராமல் _
புதிதாய் சமைத்து ஊட்டு..!

தேடல் ஆவியால் அவதரித்தவனென
பயணப்படு..!

நோக்கத்தில் _ மண்டிகள்
ஆக்கம் காட்டும்போது
சமயோசித வாளால் வெட்டிவிடு.!

ஆமாம் ஆமைகளை தள்ளி வை.!
துருவும் துருவலை சேர்த்துவை..!

பிரச்சனை பூதங்களுக்கு
புறமுதுகு காட்டாமல் _ அதன்
முதுகில் பயணித்து
சங்கை அறு.!

பிளவு புயல் பந்தாடும்போது
அணுவின் பிளவு தான்
அணுகுண்டாக வெடிக்குதென தெரிக..!

தடுக்கி விழுவது
முடங்கி அழுவதற்கல்ல _
உயிர்த்தன்மையின் வெளிப்பாடு என்றும்,
உரமேற்றும் சாப்பாடு என்றும் அறிக..!

தக்கது வாழும் என்பதால்
தனித்து தெரியும்படி உன்னை
தக்க வைத்துக்கொள்..!

நிறைகுடம் என்று எண்ணாமல்
தாழ்மையுடன்
இறைத்துக் கொண்டிரு.!

எழுதுவது : கவிஞர் விஜய் சேசுலா.