பாலின அடையாளமற்ற கடவுச்சீட்டு வேண்டுமென்ற கோரிக்கை பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டது.
ஒருவர் தான் ஆணா, பெண்ணா என்று அடையாளம் காட்டாமல் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளும் உரிமை சில நாடுகளில் அமுலுக்கு வந்திருக்கிறது. அதே போன்று கோரி நீதிமன்றத்துக்குச் சென்ற Elan-Cane என்பவரின் வேண்டுதலை பிரிட்டனின் உச்ச நிதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு ஒரே குரலில் மறுத்திருக்கிறது.
கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் கட்டாயம் ஆணா, பெண்ணா என்று பதிய வேண்டும் என்பது ஒரு மனிதர் தனது அடையாளத்தைக் காட்டாமல் வாழ உரிமை வேண்டும் என்ற பிரத்தியேக விருப்பத்துக்கு எதிராக இருப்பதாகவும் அதனால் அது ஒரு மனித உரிமை மீறல் என்றும் Elan-Cane தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதிமன்றமோ குறிப்பிட்ட வேண்டுகோள் ஐரோப்பாவின் மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டவை அல்ல என்று தனது பதிலில் குறிப்பிட்டிருக்கிறது.
மால்டா, நேபாளம், ஜேர்மனி, பாகிஸ்தான், ஆஸ்ரேலியா, கனடா, டென்மார்க் ஆகிய நாடுகள் பாலினம் குறிப்பிடப்படாத கடவுச்சீட்டுக்களைக் கொடுக்கின்றன. இவ்வருட ஜூன் மாதத்தில் அது அமெரிக்காவிலும் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்