பொற்கோவிலுக்குள் கருவறைக்குள் நுழைந்த ஒரு இளைஞனை அடித்துக் கொன்றார்கள் அங்கிருந்தவர்கள்.
தர்பார் சாஹிப் என்றழைக்கப்படும் அமிர்த்சரிலிருக்கும் பொற்கோவில் சீக்கியர்களின் அதி முக்கியமான புனித தலமாகும். அந்தக் கோவிலுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கும் கருவறைக்குள் புகுந்து அதை மதியாது நடந்த ஒருவனை அங்கிருந்தவர்கள் வெளியே இழுத்துச் சென்றார்கள்.
சனியன்று மாலையில் பக்தர்கள் வழக்கம்போல அங்கே தொழுதுகொண்டிருக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்த ஒரு 20 – 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் கருவறைப் பகுதியின் வேலியின் மேலாக உள்ளே பாய்ந்தான். அங்கிருக்கும் புனித புத்தகத்தை அடுத்திருக்கும் வாளை எடுக்க முயன்றான் என்று அங்கே கூடியிருந்தவர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள்.
குரு கரந்த் சாஹிப் என்று குறிப்பிடப்படும் புனித புத்தகத்தை ஜெபித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அப்பகுதியில் பொருத்தியிருக்கும் காமராக்கள் விடாமல் படமாக்கிக்கொண்டிருக்கும். அவைகளில் அங்கு நடந்தவை படமாகியிருக்கின்றன. அங்கே பாதுகாப்புக்கு நின்றவர்கள் எல்லோரையும் மீறி அந்த இளைஞன் எப்படி உள்ளே புகுந்தான் என்று பலரும் ஆச்சரியத்தைத் தெரிவிக்கிறார்கள்.
கோவிலின் கருவறைப் பகுதியிலிருந்து வெளியே பாதுகாப்புப் படையினரால் அகற்றப்பட்ட அந்த இளைஞனை இன்னொரு பக்கத்தில் கூடியிருந்த கூட்டம் கோபத்துடன் அடித்துக் கொன்றுவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
குரு கரந்த் சாஹிப் என்ற புனித புத்தகம் சீக்கியர்களிடையே 11 வது குருவாகக் கருதப்படுகிறது. அப்பகுதியை நெருங்குகிறவர்கள், அவமதிக்கிறவர்கள் சீக்கியர்களிடையே தண்டிக்கப்படுகிறார்கள். அச்செயல்கள் பல அரசியல் பிளவுகளையும் பஞ்சாப்பில் உண்டாக்கியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்