பறவைகளின் இசை, ஆஸ்ரேலியாவில் இவ்விடுமுறைக்கால இசைத்தட்டுகளில் அதிக விற்பனையிலிருக்கிறது.
நத்தார்-புதுவருட விற்பனையில் இசைத்தட்டுக்களும் முக்கியமானவை. ஆஸ்ரேலியாவில் இந்த விடுமுறைக்காலத்தில் விற்பனையாகும் இசைத்தட்டுக்களின் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடித்திருக்கிறது Song of Disappearence என்ற பறவை இசைகளின் கோர்வை ஆகும்.
இதுபோன்ற இசைகளின் கோர்வையிலான இசைத்தட்டொன்று விற்பனையில் முதல் மூன்றிடங்களில் ஒன்றைப் பிடிப்பது இதுவே முதல் தடவையாகும். அழிந்துவரும் 53 பறவையினங்களின் குரல்களைக் கொண்டே இந்த இசைத்தட்டு தயாராகியிருக்கிறது.
ஆஸ்ரேலியாவின் பறவையினங்களின் ஆர்வலர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையொன்று அங்கே வாழும் பறவைகளில் பல முழுவதுமாக அழிந்துவருகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்தே மேற்கண்ட இசைத்தட்டுக்கான எண்ணம் உருவாகியது. சுமார் 200 பறவையினங்கள் ஆஸ்ரேலியாவில் அழிவை நோக்கிக்கொண்டிருக்கின்றன. கடந்த 10 வருடங்களில் மட்டும் 90 பறவையினங்கள் அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆஸ்ரேலியாவின் பறவை ஆர்வலர்கள் அமைப்பைச் சேர்ந்த ஷோன் டோலி என்பவர் நாற்பது வருடங்களாக ஆஸ்ரேலியாவின் மூலை முடுக்களுக்கெல்லாம் சென்று பதிவுசெய்துவந்த பறவைக் குரல்களிலிருந்து தான் இசைத்தட்டுக்கான உள்ளடக்கம் எடுக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்