துணிவு கொள்…
ஒன்றாகு! ஒன்றுக்குள் ஒன்றாகு! ஒன்றின்மேல்
ஒன்றென்ற எண்ணம் ஒழித்து!
நல்லதை எண்ணியே நன்மையே வேண்டிடின்
வல்லவன் செய்திடுவான் வாகு!
மேற்றிசையில் வீழ்ந்தாலும் மேலெழுவான் கீழிருந்து!
நாற்றிசையும் ஆள்வான் நகர்ந்து!
அறியாமை நோயுற்றோர் ஆணவத் தாலே
அறிவிழந்தே வீழ்வார் அறி!
ஆற்றல் பிறந்திட அச்சம் அகன்றிடும்!
கூற்றன்போல் மாறும் குணம்!
தன்னை அறியாரின் தன்நிலை உணராரின்
எண்ணமோ என்றும் இழுக்கு!
அறிஞர்போல் பொய்மை அணிந்து புழங்கும்
அறிவிலிகள் பேச்சோ அழுக்கு!
வஞ்சத்தை வேரறு வானம்போல் உள்ளம்கொள்
நெஞ்சத்தில் நேர்மை நிறுத்து!
நெஞ்சத்தில் கொண்டிடும் நேர்மையால் எந்நாளும்
அஞ்சாமை கொள்ளும் அகம்!
முன்னேறு! என்றும் முதன்மைக்கு திட்டமிடு!
அன்புடன் கொள்க அறம்!
துணிவுகொள்! உச்சத்தை தொட்டுவிடு! போற்றும்
பணிவினை நெஞ்சில் பதித்து!
தடம்பதி! வெற்றிகாண்! தாழ்வகற்று! மக்கள்
இடரகற்றும் வாளாய் இரு!
விடிவெள்ளி நீயாகு! வையத்தை ஆளு!
முடித்திடு தீதை முனைந்து!
சித்தமும் ஞானமும் செஞ்சுடரும் வித்தகமும்
மொத்தமும் பாரதியே மோய்!
சித்தனாய் ஞானியாய் செஞ்சுடராய் தீர்க்கத்தின் வித்தகமாய் தோன்றும் விவம்!
பாரதிதான் என்னுள்ளே பாடல்கள் செய்கின்றான்
தீரத்தை நெஞ்சில் தெளித்து!
பாவரசு குரல்…
எழுதுவது : பாரதிசுகுமாரன்