“நிலவுக்குப் போவோம், அணுசக்தி நிலையமொன்றமைப்போம்” – நாஸா
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா சந்திரனில் ஒரு அணுசக்தி நிலையமொன்றை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதிலிருந்து பெறப்படும் மின்சக்தியைப் பாவித்து சந்திரனில் தனது ஆராய்ச்சிகளைச் செய்யவும், செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்கான மின்சக்தியை அதிலிருந்து பெறவுமே அத்திட்டம் போடப்பட்டு வருகிறது.
சுமார் 40 கிலோ வாட் மின்சக்தியைத் தயாரிக்கக்கூடிய ஒரு அணுசக்தி நிலையத்தை 2030 ம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு எடுத்துச் செல்லும் விண்கலத்தை ஏவிவிடுவது சாத்தியமா என்ற ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அணுசக்தி நிலையத்தைச் சந்திரனில் நிறுவுவதில் மிகவும் ஆபத்தான கட்டம் விண்கலத்தை வானில் ஏவிவிடும் கட்டமாகும். விண்கலத்தில் அணுசக்தி தயாரிப்பு நிலையம் இருப்பதால் அது எந்தவித பாதிப்பும் இன்றி சந்திரனை அடைவதை நிச்சயப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
சந்திரனில் காற்றோ, நீரோ இல்லாததால் அங்கே அவைகளால் மின்சக்தியை உண்டாக்க இயலாது. சூரிய சக்தியால் உண்டாக்க இயலும். ஆனால், திட்டங்களுக்குத் தேவையான அளவு மின்சார உற்பத்திக்கான உதிரிப்பொருட்களைச் சந்திரனுக்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினமானது. எனவேதான் நாஸா அணுமின்சார உலையை அங்கே நிறுவத் திட்டமிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்