“சீன – சிறீலங்கா உறவுகளில் மூக்கை நுழைக்க மூன்றாவது நாடெதுவுக்கும் அனுமதியில்லை” என்கிறது சீனா.
மாலைதீவுக்குப் போய்விட்டுச் சிறீலங்காவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சமயத்தில் அவர், “சீனாவுக்கும் சிறீலங்காவுக்குமான நெருக்கமான உறவு மூன்றாவது நாடெதுவுக்கும் தலைவலியைக் கொடுக்கவில்லை, எனவே அவ்வுறவுகளுக்குள் மூக்கை நுழைக்கும் உரிமை மூன்றாவது நாடெதுவுக்கும் இல்லை,” என்று குறிப்பிட்டார்.
சிறீலங்காவின் அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதாகக் குறிப்பிட்டுச் சீனா அப்பகுதிகளில் செய்துவரும் முதலீடுகள் பற்றிச் சர்வதேச விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பலவீனமான, சிறிய நாடுகளுக்கு அபிவிருத்திக் கடன் கொடுப்பதாக ஏமாற்றித் தனது கடன் வலையில் சீனா வீழ்த்தி அந்த நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
Belt and Road (BRI) infrastructure projects என்ற பெயரில் சீனா ஆசியா, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் செய்துவரும் முதலீடுகள் பற்றி அமெரிக்க அரசு டொனால்ட் டிரம்ப் காலத்திலிருந்தே பெருமளவில் விமர்சித்து வருகிறது. அத்துடன், தனது நாட்டைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் சீனா செய்துவரும் இந்தத் திட்டங்கள் இந்தியாவுக்கும் பெரும் தலையிடியாக இருந்து வருகின்றன.
“இந்து சமுத்திரப் பிராந்தியத்து நாடுகளில் நான் கவனிக்கும்போது அவைகள் ஒரே விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன என்று புரிந்துகொள்கிறேன். அந்த நாடுகளை ஒன்றுசேர்த்து அவர்களுக்கான அபிவிருத்தியில் உதவிசெய்வதே சீனாவின் நோக்கம்,” என்கிறார் சீனாவின் வெளிவிவகார அமைச்சர்.
சிறீலங்கா சமீபத்தில் அனுபவித்து வரும் அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் ஜனாதிபதி கோட்டபாயா சீனாவிடம் உதவி கோரியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்