நூற்றுக்கும் அதிகமான தனவந்தர்கள் ஒன்றுசேர்ந்து, “எங்கள் மீது வரி விதியுங்கள்,” என்று கோரியிருக்கிறார்கள்.
டாவோஸ் நகரில் தொலைத்தொடர்பு மூலம் நடந்துவரும் உலகப் பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டில் உலகின் 102 தனவந்தர்கள் ஒன்றிணைந்து “எங்கள் மீது இப்போதே வரி விதியுங்கள்,” என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
“ஒவ்வொரு உலக நாட்டிலும் பணக்காரர்கள் தமது பங்குக்கான நியாயமான பங்கைச் செலுத்தும்படி கோரவேண்டும். அதை இப்போதே பணக்காரரான எங்கள் மீது வரியைச் செலுத்தும்படி கோருங்கள்,” என்று அவர்களுடைய பகிரங்கக் கடிதம் குறிப்பிடுகிறது.
உலகின் அதீத தனவந்தர்கள் மீது ஒரு விகித வரியைப் போட்டாலே 2.52 திரில்லியன் டொலர்களை உலக நாடுகள் பெற முடியும். அதன் மூலம் ஒவ்வொரு உலகக் குடிமகனுக்கும் வேண்டிய கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுத்த பின்னர் 2.3 பில்லியன் பேரை வறுமையிலிருந்து விடுவிக்கவும் முடியும் என்று கடந்த வாரத்தில் வெளிவந்த ஒக்ஸ்பாம் அமைப்பின் புள்ளிவிபரங்கள் காட்டியிருந்தன. அதையடுத்தே நூற்றுக்கும் அதிகமான தனவந்தர்கள் ஒன்று சேர்ந்து தம்மீது வரி விதிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
“கடந்த இரண்டு வருடங்களாக உலக மக்கள் அனைவரும் பெரும் கஷ்டங்களைத் தாங்கி வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதே சமயம் எங்களுடைய சொத்தின் அளவு பல்கிப் பெரியதாகியிருக்கிறது. இதற்குக் காரணம் சர்வதேச ரீதியில் அறவிடப்படும் வரி நியாயமற்ற முறையிலிருப்பதாகும். அது தனவந்தர்களுடைய சொத்தைப் பெரியதாக்குகிறது.”
தமது கடிதத்தில் வெவ்வேறு விதத்தில் தங்கள் மீதும் உலகப் பெரும் தனவந்தர்கள் மீதும் எந்த விதத்தில் வரிகளை அறவிடலாமென்று அந்த 102 தனவந்தர்களும், ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜேர்மனி, ஆஸ்திரியா, நோர்வே, நெதர்லாந்து, டென்மார்க்கைச் சேர்ந்த மிகப்பெரும் தனவந்தர்களாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்