மார்ச் மாதத்துக்கு முன்பு சிறுமிகளுக்கான பாடசாலைகளைத் திறக்க தலிபான்கள் நோர்வேயில் உறுதிகூறினார்கள்.

மூன்று நாட்களாக நோர்வேயின் ஒஸ்லோவில் தலிபான்களின் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றன. மனித உரிமைகள் மதித்தல், பெண்களுக்குக் கல்விக்கூடங்கள், பெண்ணுரிமை ஆகியவற்றை ஆப்கானிஸ்தானில் நிலைநாட்டத் தலிபான்கள் ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக மனிதாபிமான உதவிகளை நலிந்துபோயிருக்கும் ஆப்கானிஸ்தானுக்குக் கொடுக்க மேற்கு நாடுகள் தயாராக இருக்கின்றன.  

“மார்ச் மாதத்தில் சிறுமிகள் பாடசாலைகள் திறக்கப்பட்டிருக்கவேண்டும் 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், பெண்களுடைய உயர்கல்விக்கூடங்களும் செயற்பட ஆரம்பிக்கவேண்டும் என்பதை நாம் தெளிவாக அவர்களிடம் சுட்டிக்காட்டினோம்,” என்று நோர்வேயின் பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோரே பேச்சுவார்த்தைகளின் பின்பு தெரிவித்தார். அச்சமயத்தில் அவர் நியூயோர்க்கில் இருந்து நிலைமையைக் கேட்டறிந்திருந்தார்.

தலிபான்களின் பிரதிநிதிகள் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், மனிதாபிமான அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றைய ஐரோப்பிய நாட்டு ராஜதந்திரிகள் ஆகியோர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். சகல பேச்சுவார்த்தைகளும் நடக்கும்போது வெளியே எவ்வித விபரங்களும் கசியாமல் மூடிய கதவுகளுக்குப் பின்னாலேயே நடைபெற்றன.   

“பிரயாணம் மிகவும் நன்றாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பம் எங்களை மற்றைய உலக நாடுகளுக்கு நெருக்கமாக வர உதவியது,” என்று குறிப்பிட்ட தலிபான் பிரதிநிதிகளின் தலைவர் தம்மை வரவேற்ற நோர்வே அரசுக்கு நன்றி தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் அமிர் கான் முத்தாக்கி பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிந்தது என்று தெரிவித்தார்.

தலிபான்களின் குழுவுடன் வந்திருந்த அனாஸ் ஹக்கானி அமெரிக்காவின் தீவிரவாதிகள் பட்டியலில் முக்கியமான ஒரு நபராகும். சர்வதேச ரீதியில் தீவிரவாதிகளுக்குப் பொருளுதவி செய்யும் ஹக்கானி அமைப்பின் முக்கிய நபர் அனாஸ் ஹக்கானி. கத்தாரில் நடந்த மேற்கு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனாஸ் பங்குகொள்ளவேண்டியிருந்ததால் அவரது பெயர் அப்பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது.

அனாஸ் ஹக்கானியும் தலிபான்களும் நோர்வே அரசால் வரவேற்கப்பட்டதுக்கு எதிராகப் பல அகதிகள் அமைப்புக்கள் ஒஸ்லோவில் குரலெழுப்பின. நோர்வேயில் வாழும் அகதிகள் குழுவொன்றின் பிரதிநிதி நாட்டின் பொலீஸ் ஹக்கானிகைக் கைது செய்யவேண்டும் என்று கோரினார்.

செவ்வாயன்று இரவு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் தலிபான்கள் பயணமானார்கள். பங்குபற்றிய பேச்சுவார்த்தைகளில் அவர்கள் கொடுத்த உறுதிகளில் நம்பிக்கையுடன் இருப்பதாக நோர்வேயின் பிரதிநிதிகள் குறிப்பிட்டார்கள். அவர்களைத் தவிர அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியோரின் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். தாம் தலிபான்களை ஆப்கானிஸ்தானில் ஆட்சியாளர்களாக ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை என்று அவர்கள் மீண்டும் தமது அறிக்கையில் உறுதிப்படுத்தினார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்