உங்கள் சொல்லுக்கு எங்கும் தனி மதிப்புத்தான் | தனுசு ராசிக்காரரின் பொதுப்பலன்கள்
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும்,
மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத மார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்,
யே, யோ, ப, பி, பு, த, பூ, ட, பே ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.
ராசியின் அதிபதி : குரு, நட்சத்திர அதிபதி: கேது, சுக்கிரன், சூரியன்.
யோகாதிபதிகள்: சூரியன், செவ்வாய், குரு.
பாதகாதிபதி: புதன்.
மாரகாதிபதி: புதன் சுக்கிரன்.
உள்ளத்தில் உறுதியுடன் இனிமையாகவும் பேசி உங்களின் தேவைகளுக்கு மற்றவர்கள் உதவும்படி செய்திடக் கூடிய தனுசு ராசி நண்பர்களே! ஆழ்ந்த சிந்தனையும் ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்ட உங்களின் ஆலோசனைகள் பலருடைய வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.
எதிரிகளைப் பேச வைத்து எடை போடுவதில் வல்லவரான உங்களிடம் எப்போதும் உற்சாகம் நிறைந்திருக்கும். எந்த ஒன்றிலும் சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பது உங்களுக்கு கைவந்த கலையாகும் என்றாலும், உங்களால் தான் மற்றவர்களுக்கு முன்னேற்றமே ஒழிய உங்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். உங்கள் ராசிநாதன் குரு தனக்காரகன், புத்திரக்காரகன் என்று கூறப்படுபவர். குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழிக்கு இலக்கணமாக விளங்கும் குரு பகவானின் ஆதிக்க ராசியில் பிறந்த உங்களுடைய பார்வைகளுக்கு ஆட்படும் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் நன்மையை அடைவார்கள் என்றே சொல்ல வேண்டும்.
குரு பகவானின் அருள் கொண்டவரான நீங்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் சிறந்து விளங்குவீர்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பீர்கள், செயல்படுவீர்கள். அதே நேரத்தில் அவசரமில்லாமல் நிதானமாக நீங்கள் செயல்பட்டால் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
உங்கள் தகுதிக்கு குறைவானவர்களுடன் நட்புக் கொள்ள உங்களுக்குப் பிடிக்காது என்று கூறக்கூடிய அளவிற்கு உயர்ந்த எண்ணங்களும் உயர்வான கொள்கையும் கொண்டவராக நீங்கள் விளங்குவீர்கள். ஓய்வு நேரத்தையும் வீணடிக்காமல் உழைத்து உயர்வதில் ஆர்வம் உடையவராக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதை மிகச் சிறப்பாக செய்து வெற்றி காண்பீர்கள். கூட்டு தொழில் உங்களுக்கு எப்போதுமே ஒத்து வராது அதனால் லாபமும் கிட்டாது.
எந்த ஒன்றிலும் உங்களுக்கு முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கும் அதன் காரணமாக உங்களின் செயல்பாடு சிலருக்கு பொறாமையை உண்டாக்கும் என்பதால் அவர்கள் உங்களை விட்டு ஒதுங்கவும் செய்வார்கள். களத்திரக்காரகனான சுக்கிரன் உங்களுக்கு பகைவன் என்பதால் மனைவி அமைவதோ, கணவன் அமைவதோ இறைவன் கொடுத்த வரமாகவே இருக்கும்.
நீங்கள் எளிய தோற்றத்தைக் கொண்டவராக இருந்தாலும் எப்போதும் உங்கள் சொல்லுக்கு எல்லா இடத்திலும் தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். வாழ்வின் பிற்பகுதிதான் உங்களுக்கு யோகமாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை வசதிக்கேற்ப யாவும் உங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடும். பணவரவில் தடை இருந்தாலும் கடன் வாங்கியாவது வீடு, மனை, வாகனம் என்று அமைத்துக் கொள்வீர்கள். வீட்டிற்குள் நீங்கள் எப்படி இருந்தாலும் வெளிவட்டாரத்தில் மதிப்பு மிக்கவராகவே இருப்பீர்கள்.
பொதுவாக பிறவியிலேயே சுதந்திர மனோபாவத்தை கொண்டவர் நீங்கள், அதனால் உங்களை யாரும் எந்த ஒன்றிலும் எப்போதும் கட்டுப்படுத்த முடியாது. யாருக்கும் கட்டுப்பட்டும் வாழ மாட்டீர்கள். உங்கள் போக்கில் நீங்கள் செல்வதே உங்களுக்கும் உங்களை நம்பியிருப்பவர்களுக்கும் முன்னேற்றத்தை உண்டாக்கும். எதையும் ஊடுருவிப் பார்க்கும் உங்களிடம் சுறுசுறுப்பும் இருக்கும் பிறர் உள்ளத்தில் இருப்பதை சுலபமாக அறிந்து கொள்ளும் சக்தியும் உங்களுக்கிருக்கும். அதேபோல் நாளை நடக்கப் போவதை இன்றே அறிந்துகொள்ளும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கும் இந்த ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ள வளர்த்துக் கொள்ள உங்கள் எதிர்கால வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.
உங்களில் பலர் சட்ட மேதைகளாகவும், தத்துவவாதிகளாகவும், கல்வியாளர்களாகவும், ஆன்மீக பிரசங்கிகளாகவும் இருக்கின்றனர். எதிர்காலத்தின் மீது எப்போதும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பீர்கள். பிறருக்கு வழிகாட்டியாக விளங்கும் உங்களுக்கு, எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமே உங்கள் மனம் முழுவதும் நிறைந்திருக்கும்.
உங்கள் ராசியாதிபதி தேவகுருவான குரு பகவான் என்பதால் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும், அதன் மூலம் வசதிகளும் உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வந்து சேரும். என்றாலும், அதை உங்கள் கையில் வைத்துக் கொள்வதும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதும் உங்களிடத்தில் மட்டுமே இருக்கிறது. மற்றவர்களின் செயல்களை வழிமுறைப் படுத்தித்தரும் ஆற்றல் உங்களுக்கு இயல்பாகவே இருக்கும். நிர்வாகத் துறையில் நீங்கள் சிறப்பாகவே செயல்படுவீர்கள். வாழ்க்கையில் அலங்காரத்தை விட வசதியாக வாழ்வதையே நீங்கள் விரும்புவீர்கள். ருசியான உணவும், அதிகமான இன்ப உணர்ச்சியும் உங்கள் தேவையாகவும் அதை அடையும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலும் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். வெற்றியும் தோல்வியும் உங்களைப் பொறுத்தவரையில் ஒரே சமநிலையிலேயே இருந்து வரும்.
உங்கள் சுய கௌரவத்தை எப்போதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் பொருள் ஈட்டுவதும் அந்த வகையில்தான் இருக்கும். உங்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதைச் சிறப்பான முறையில் நடத்தி அதில் லாபத்தை உண்டாக்கிக் கொடுத்து உங்கள் மீது வைத்த நம்பிக்கையை வலுப்படுத்துவீர்கள். வேறு எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அதை முடிக்காமல் ஓய மாட்டீர்கள்.
நல்ல முறையில் நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் பிறர் செய்யும் குற்றங்களைக் கண்டு கோபப்படுவீர்கள். அவர்களிடமே அதுபற்றி சொல்லி அவர்களை திருத்த முயல்வீர்கள். உணர்ச்சி வசப்பட்டு அவர்களை கண்டிக்கவும் செய்வீர்கள் அதனால் மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள், எப்படி பேசுவார் என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். உங்களைப் போலவே எல்லோரும் நீதியாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்று நினைக்கும் நீங்கள் சில சமயங்களில் ஏமாற்றமும் அடைவீர்கள். நேர்மையாக உண்மையாக நீங்கள் பேசும் வார்த்தைகள் ஒருசிலருக்கு உங்கள் மீது வெறுப்பையும் உண்டாக்கும். மதத்தின் மீதும், பக்தியின் மீதும் அழுத்தமான நம்பிக்கை உங்களுக்கிருக்கும் என்பதால் தெய்வீக விஷயங்களில் உங்கள் மனம் ஒன்றிவிடும். கால நிலைகளையும் சூழ்நிலைகளையும் மக்களின் மனநிலைகளையும் புரிந்துகொண்டு செயல்படும் உங்களுக்கு பக்தியின் மூலமாகவே வாழ்வதற்கு ஏற்ற வழியும் உண்மையின் உயர்ந்த விளக்கமும் எல்லாவற்றையும் உணரும் சந்தர்ப்பங்களும் உண்டாகும்.
இவையெல்லாம் தனுசு ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.
எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.
எழுதுவது – சோதிடவித்தகர் பரணிதரன்