தனது 27 வயதிலேயே ஓய்வுபெறும் பாக்கியத்தைப் பெற்றது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.
இணையத்தளத்தின் ஆரம்பகாலத்தில் அதைப் பாவித்தவர்கள் எவரும் தவறவிட்டிருக்க முடியாத செயலி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 27 வருடங்களாக அந்த நிறுவனத்தின் இயக்கங்களுடன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த எக்ஸ்ப்ளோரர் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது. கடந்த வருடம் மைக்ரோசொப்ட் நிறுவனம் அதை முழுவதுமாக ஓய்வுபெறச்செய்ய எடுத்த முடிவின்படி ஜூன் 15 ம் திகதி முதல் அதன் செயற்பாடு நிறுத்தப்படவிருக்கிறது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 95 இயக்கத்தை வெளியிட்டபோது முதல் தடவையாக எக்ஸ்ப்ளோரர் வெளியாகியது. அதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயக்கத்தை நவீனகரமாக்கும்போதெல்லாம் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ப்ளோரர் செயலி வழங்கப்பட்டது. 2003 இல் எக்ஸ்ப்ளோரர் தனது உச்சக்கட்டப் பிரபலத்தைப் பெற்றது. இணையத்தளத்தில் உலவுபவர்களில் 95 விகிதமானோர் அதைப் பாவித்தார்கள்.
அதற்கடுத்த வருடங்களிலேயே எக்ஸ்ப்ளோரருக்குப் போட்டியாக வெளியாகிய பல செயலிகளுடன் அதனால் ஈடு கொடுக்க முடியவில்லை. காரணம் பாவனையாளர்களுக்கு அவை இலகுவாக இருந்ததும், புதிய தேவைகளை நிறைவேற்ற உதவியமையும், வேகமாக இணையத்தில் பவனிவர உதவியதுமாகும். எனவே, 2016 இலேயே மைக்ரோசொப்ட் நிறுவனம் எக்ஸ்ப்ளோரரை மேலும் அபிவிருத்தி செய்து, நவீனப்படுத்துவதை நிறுத்திவிட்டது.
தொடர்ந்தும் எக்ஸ்ப்ளோரர் பாவிப்பவர்கள் அது ஓய்வுபெறப்போவதால் பிரச்சினைக்கு உள்ளாகப் போவதில்லை. அதை ஈடுசெய்ய மைக்ரோசொப் எட்ஜ் என்ற செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. எக்ஸ்ப்ளோரரைப் பாவிக்க முயல்பவர்கள் தாமாகவே மைக்ரோசொப்ட் எட்ஜ் -க்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். அத்துடன் இணையத்தில் அதை எப்படித் தரவிறக்கம் செய்து பாவிப்பது என்பது பற்றிய விபரங்களும் இலகுவாகக் கிடைக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்