புதிய பனிக்கரடிகளை கிரீன்லாந்தில் கண்டதால் அவைகளின் எதிர்காலம் பற்றி ஆராய்வாளர்கள் நம்பிக்கை.
கிரீன்லாந்தின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் இதுவரை அறிந்திராத ஒரு கூட்டம் பனிக்கரடிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை அறியப்பட்டிருந்த பனிக்கரடிகள் வாழும் சூழலை விட வித்தியாசமான சூழலில் வாழப் பழகிவிட்டிருக்கும் அவற்றின் எண்ணிக்கை சில நூறு என்று குறிப்பிடப்படுகிறது. அவை இதுவரை அறியப்பட்ட பனிக்கரடிகளுடன் தொடர்பின்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
உலகெங்கும் மொத்தமாக சுமார் 25, 000 பனிக்கரடிகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. வட துருவத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்த பனிப்படலம் கரைந்து வருவதால் எதிர்காலத்தில் அவ்விலங்குகள் வாழ்வதற்குரிய சூழல் அழிந்து அவையும் படிப்படியாக அழிந்துவிடும் என்று சமீப வருடங்களில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
புதியதாகக் கவனிக்கப்பட்டிருக்கும் பனிக்கரடிகள் இதுவரை அறியப்பட்டிருந்தவையை விடக் குறைவான அளவு பனிக்கட்டிகள் உள்ள பிராந்தியத்தில் வாழ்ந்து பழகியிருக்கின்றன. அவை உடைந்த பனிக்கட்டிகள், கரைந்துவரும் பனிக்கட்டிகளிடையே வாழ்ந்து அங்கேயே தமக்கான உணவுவகைகளைத் தேடிக்கொள்ளவும் பழகியிருக்கின்றன.
காலநிலை மாற்றத்தினால் கரைந்துவரும் பனிப்பிராந்தியத்தியத்தில் தமக்கான வாழும் சூழலுக்குத் தங்கியிருந்த பனிக்கரடிகள், மாற்றங்களை அனுசரித்து வாழப் பழகியிருப்பதையே புதியதாக அறியப்பட்ட பனிக்கரடிக் கூட்டம் காட்டுவதாக ஆராய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே, மொத்தமான பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைந்து போகும் என்பதே நிஜமானாலும் அவை எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் காலநிலைக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்