மக்களின் வேண்டுகோளின்படி நாட்டில் மக்களாட்சிக்கு வழியமைப்போம் என்றார், சூடானின் இராணுவ ஆட்சித்தலைவர்.
சர்வதேசக் குரலும் நாட்டு மக்களின் குரலும் ஒருங்கிணைந்து கடந்த பல மாதங்களாக சூடானில் அரசைக் கைப்பற்றிய இராணுவம் மக்களாட்சியைக் கொண்டுவரவேண்டும் என்று கோரி வந்தன. பல தடவைகள் நியமிக்கப்பட்ட அரசிடம் ஆட்சியைக் கொடுப்பதாகச் சொல்லி ஏய்த்த இராணுவத் தளபதி அப்துல் பத்தே அல் புர்கான் இராணுவம் மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்திருப்பதாகத் திங்களன்று குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனநாயக இயக்கங்களும், ஐ.நா-வும் நடத்தும் மக்களாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இனிமேல் இராணுவம் கலந்துகொள்ளாது என்று அல் புர்கான் தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து இராணுவ ஆட்சிக்கெதிராக நடந்து வரும் மக்கள் போராட்டம் கடந்த ஐந்து நாட்களாக சத்தியாக்கிரக இயக்கமாக மாறியிருக்கிறது. மக்களின் போராட்டங்களை ஒடுக்க இராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய வன்முறையால் இதுவரை 114 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
அல் புர்கானின் உறுதிமொழியில் மக்களுக்கு நம்பிக்கையில்லாததை எதிரொலிக்கும் வகையில் அதையடுத்துப் புதிய போராட்டங்கள் நாட்டின் பகுதிகளில் ஆரம்பித்திருக்கின்றன. “அல் புர்கானின் ஏமாற்று வேலையை இன்னொரு முறை நம்பமாட்டோம். உடனடியாக அவரும் இராணுவமும் ஆட்சியை விட்டிறங்கவேண்டும்,” என்று போராட்டக்காரர்கள் கோருகிறார்கள்.
பல வருடங்களாகச் சூடானில் சர்வாதிகாரியாக இருந்து வந்த ஒமார் அல் பஷீரின் ஆட்சி 2019 இல் மக்கள் போராட்டத்தால் வீழ்த்தப்பட்டது. அதையடுத்து நாட்டின் மக்கள் இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஐ.நா-வின் உதவியுடன் ஏற்படுத்திய அரசில் முக்கிய இடங்களைப் பெற்றுக்கொண்ட இராணுவம் படிப்படியாக மற்றவர்களை ஒதுக்கிவிட்டுத் தானே ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.
அதையடுத்தே மக்கள் ஒன்றுபட்டுக் கடந்த ஐந்து மாதங்களுக்கும் அதிகமாக நாடெங்கும் வெவ்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இராணுவத் தலைமையின் உறுதிமொழி ஒரு பக்கமிருக்க ஐ.நா-வின் ஆதரவிலும், ஆபிரிக்க ஒன்றியத்தின் ஆதரவிலும் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதிலும் வெவ்வேறு மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகளுக்கு முரண்பாடு இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்