காட்டுத்தீக்களை அணைக்க 60 விமானங்களைப் பாவித்து வருகிறது போர்த்துக்கால்.
பூமியின் காலநிலை மாற்றத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் ஒன்று போர்த்துக்கால். காட்டுத்தீக்கள் அங்கே சமீப வருடங்களில் தமது கோரமான முகத்தை அடிக்கடி காட்டி வருகின்றன. 2017 இல் சுமார் 100 பேரின் உயிரைக் குடித்தது. சமீப வாரங்களில் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க 3,000 தீயணைப்பு வீரர்களையும், 60 விமானங்களையும் பாவிப்பதாக போர்த்துக்கால் தெரிவிக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் காட்டுத்தீ பரவியிருக்கிறது. வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டுமே 250 புதிய தீக்கள் உருவாகியிருக்கின்றன. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு 12 தீயணைப்புப் படையினரும், 17 பொதுமக்களும் சிகிச்சை பெற்று வருவதாக போர்த்துக்கால் ஊடகம் குறிப்பிடுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் தனது அங்கத்துவ நாடுகளில் ஏற்படும் காட்டுத்தீக்களை அணைப்பதற்காக ஒரு பிரத்தியேக விமானப் படையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கத்துவ நாடுகள் ஒன்றுக்கொன்று உதவும் அப்படை மூலம் ஸ்பெய்ன் தனது பக்கத்து நாடான போர்த்துக்காலுக்கு இரண்டு தீயணைப்பு விமானங்களை அனுப்பியிருக்கிறது.
போர்த்துக்கால் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் எல்லாமே இதுவரை கண்டிராத காட்டுத்தீக்களையும், அதீத வெம்மையையும் எதிர்கொண்டுள்ளன. போர்த்துக்கால் ஜூன் மாதத்தில் நாட்டின் 28 % பிராந்தியத்தில் வரட்சியான காலநிலையை அனுபவித்து வருகிறது. இவ்வார இறுதியில் நாட்டின் பல பகுதிகள் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ளும் என்று நாட்டின் வானிலை அறிக்கை எச்சரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்