முடக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யாவுடன் உக்ரேன் ஒப்பந்தம் செய்திருப்பதாகத் துருக்கியச் செய்தி.
கருங்கடல் துறைமுகத்தில் உக்ரேன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தயார் செய்திருந்த தானியக்கப்பல்களை ரஷ்யா அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து வந்தது சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துருக்கி உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே அது பற்றிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
உக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான போர் ஆரம்பமான பின்னர் அவ்விருவருக்குமிடையே முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இதுவே. துருக்கிய ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்த நல்விளைவு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஐ.நா- வின் பொதுக்காரியதரிசி வியாழன்று இரவு வந்திறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வார ஆரம்பத்திலிருந்தே இப்படியான விளைவை எதிர்பார்த்துப் பேச்சுவார்த்தைகள் நகர்வதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. உக்ரேனின் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும் அதே சமயம் ரஷ்யாவின் தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்று புத்தின் இதுபற்றிச் செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார். எனவே, இவ்வொப்பந்தம் பற்றி உக்ரேன் தரப்பில் தொடர்ந்தும் அவநம்பிக்கையே காணப்படுகிறது.
உக்ரேன் தனது தானியங்களை மட்டுமன்றி, சூரியகாந்தி எண்ணெயையும் ஏற்றுமதி செய்யக் கருங்கடல் துறைமுகப் பாதை திறந்துவிடப்படும் என்று துருக்கியப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் ரஷ்யாவின் தானியங்களை முடக்குதல் ஒரு பிரச்சினை என்று குறிப்பிட்ட அவர் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் தாம் ஆலோசித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்படாத ரஷ்யப் பொருட்களை ஏற்றுமதி செய்யப் பாவிக்கப்படும் கப்பல்களுக்கான காப்புறுதியை அனுமதிப்பது பற்றி ஐரோப்பாவும், அமெரிக்காவும் உறுதி கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்