கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கும் ஆஸியான் மாநாடும், பிராந்தியத்தின் அரசியல் பதட்ட நிலையும்.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆஸியான் இன்று கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கிறது. 27 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கும் அந்த மாநாட்டில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் பங்குபற்றுகிறார்கள்.
கம்போடியாவின் பிரதமர் ஹுன் சென் மாநாட்டை ஆரம்பித்து ஆரம்ப உரையை நிகழ்த்தினார். மாநாட்டில் பங்குபற்றாமல் ஒதுங்கியிருக்கும் மியான்மாரின் அரசியல் நிலைமை பற்றி அவர் தனது உரையில் விசனம் தெரிவித்தார். மியான்மாரில் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இராணுவத்தினர் அங்கே சமீபத்தில் சுமார் 10 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்கள். இராணுவ அரசை ஏற்க மறுத்துக் குரலெழுப்பிவரும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்தினரோ தொடர்ந்தும் தமது இரும்புக்கரங்களால் மக்களை அடக்கிவருகிறார்கள்.
கடந்த வருடம் நடந்த ஆஸியான் மாநாட்டின்போது மியான்மார் பிரதிநிதிகள் அதில் பங்குபற்றியிருந்தார்கள். அச்சமயத்தில் நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருவது பற்றி விரைவில் அறிவிப்பதாகவும், மக்கள் மீதான தமது அராஜகச் செயல்களை நிறுத்துவதாகவும் மியான்மார் உறுதிகூறியிருந்தது. ஆனால், அவ்வுறுதிகளில் எதையுமே செயல்படுத்தாமல் பின்வாங்கிவிட்டது.
தாய்வானுக்குப் புதன் கிழமையன்று விஜயம் செய்த அமெரிக்கப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்ஸி பெலோஸியின் விஜயமும் அதன் காரணமாகச் சீனா அப்பிராந்தியத்தில் நடாத்திவரும் மிகப் பெரிய இராணுவப் பயிற்சியும் கூட ஆஸியான் மாநாட்டின் மீது இருண்ட மேகமாகப் படிந்திருக்கிறது. தாய்வான் தனது நாட்டின் ஒரு பாகமே என்று தொடர்ந்தும் சாதிக்கும் சீனா, தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று அறுதியாகத் தெரிவித்திருக்கிறது.
கம்போடியாவில் நடக்கும் சந்திப்புகளில் அமெரிக்க, சீன வெளிவிவகார அமைச்சர்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் எதையும் நடத்தப்போவதில்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே உக்ரேன் மீதான ரஷ்யப் போரினால் ஏற்பட்டிருக்கும் சர்வதேசப் பதட்ட நிலைமை, சீன- அமெரிக்க மனக்கசப்பால் மோசமாகிவிடலாகாது என்று பயப்பிடுகின்றன ஆசிய நாடுகள்.
சாள்ஸ் ஜெ. போமன்