பிரான்சில் அதீத பணவீக்கத்துக்கு மருந்தாக எரிபொருட்களுக்கு வரி நீக்கம், ஓய்வூதிய அதிகரிப்பு.
நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் பணவீக்கத்தை மந்தப்படுத்தும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. விலையுயர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சுமைகளின் ஒரு பகுதியை அரசு ஏற்றிருக்கிறது என்று ஜனாதிபதி மக்ரோன் திருப்தியுடன் குறிப்பிடுகிறார். இடதுசாரிகளோ, செய்யப்பட்டிருக்கும் வரிவிலக்குகள் மக்களின் வாழ்க்கையின் சுமையைக் குறைப்பதில் பாரிய வித்தியாசங்களெதையும் செய்யவில்லை என்று விமர்சித்திருக்கிறார்கள்.
பெற்றோல் வாங்குபவர்களுக்கு விலையில் கழிவு, வீடுகளில் வெம்மையைப் பேண எரிவாயு வாங்குகிறவர்களுக்கு வரி விலக்கு, ஓய்வூதியத்தை 4 % ஆல் அதிகரித்தல், வாடகை உயர்வு நிறுத்தம் ஆகியவை பிரான்ஸ் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் நடவடிக்கைகளாகும். உணவுப்பொருட்களின் விலையுயர்வால் பாதிக்கப்படாமலிருக்க ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்களுக்கு சுமார் 100 டொலர்கள் இலையுதிர்காலத்தில் கொடுக்கப்படும்.
நடந்தேறிய தேர்தல்களில் வெற்றிபெற்றுச் சுமார் நாலிலொரு பகுதி பாராளுமன்ற இடங்களைக் கைப்பற்றியிருக்கும் இடதுசாரிகளின் கூட்டணி மக்ரோன் அரசு விலையேற்றங்களை மட்டுப்படுத்தச் செய்திருக்கும் நடவடிக்கைகள் வெறும் முகப்பூச்சே என்று கண்டிக்கிறார்கள். எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய விவாதங்களில் தாம் ஒதுக்கப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்