காஸா மீது இரண்டாவது நாளாக இஸ்ராயேலின் விமானத் தாக்குதல்கல் தொடர்கின்றன.
காஸா பிராந்தியம் மீண்டும் இஸ்ராயேலின் விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. சுமார் 365 சதுர கி.மீ பிராந்தியத்துக்குள் முடக்கப்பட்டு வாழும் பாலதீன மக்களிடையே இருந்துகொண்டு இஸ்ராயேலைத் தாக்கும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பைக் குறிவைத்தே தனது தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகிறது.
வெள்ளியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் தாக்குதல்களில் முதல் நாளன்று மட்டுமே சுமார் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒரு 5 வயதுக் குழந்தையும் அடக்கம். சனியன்று தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்களில் மேலுமிருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. (PIJ) இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் ஒரு தலைவனைச் சில நாட்களுக்கு முன்னர் இஸ்ராயேல் கைது செய்ததால் காஸா பகுதியிலிருந்து இஸ்ராயேலை நோக்கி அவ்வியக்கத்தினர் தாக்குதல்கள் நடத்தினார்கள். அதற்குப் பதிலளிக்கவே தாம் தாக்குவதாக இஸ்ராயேல் குறிப்பிடுகிறது.
கடந்த வருடம் காஸா மீது இஸ்ராயேல் நடத்திய 11 நாள் போருக்குப் பின்னர் இரண்டு தரப்பாருக்கும் ஏற்பட்டிருக்கும் மோசமான போர் இதுவாகும். தற்போதைய நிலைமையில் இரண்டு தரப்பாருக்குமிடையே வளரும் பிரச்சினைகளை மட்டுப்படுத்த எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை. காஸா பிராந்தியத்தை ஆண்டுவரும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ராயேலின் தாக்குதல் தொடருமானால் தாமும் போரில் சேர்வதாக எச்சரிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்