டுவிட்டரில் மறு பதிவுகள் செய்ததற்காக சவூதியப் பெண்ணுக்கு 34 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஐக்கிய ராச்சியத்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்த சவூதியைச் சேர்ந்த 34 வயதுப்பெண் கடந்த வருடம் தனது நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது கைதுசெய்யப்பட்டிருந்தார். வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு சவூதிய அரசை விமர்சித்துவரும் சவூதியர்களின் டுவீட்டுகளை மறுபதிவு செய்தது அவருடைய குற்றமாகும்.
34 வயதான சல்மா அல் ஷெஹாப் என்ற அப்பெண்மணி இரண்டு குழந்தைகளின் தாயாகும். முதல் கட்டமாக அவருக்கு மூன்று வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இணையத்தளத்தைப் பாவித்து நாட்டில் “சட்டம் ஒழுங்கை நிலைகுலையவைத்தது, பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்தது” ஆகியவை அதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டது.
அல் ஷெஹாப் மீது விதிக்கப்பட்ட தண்டனையை அவர் செய்த “மற்றக் குற்றங்களான மறு-டுவீட்டுகளுடன்” சேர்க்கும்படி நாட்டின் அரச வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அதையடுத்து அவர் மீதான தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டது. புதிய தண்டனையாக 34 வருடச் சிறைத்தண்டனையும் அதைத் தொடர்ந்து 34 வருடங்களுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடையும் போடப்பட்டிருக்கிறது.
இதுவரை எந்த ஒரு பெண்ணுரிமைப் போராளிக்கும் கொடுக்கப்படாத கடுமையான தண்டனையை அல் ஷெஹாப் பெற்றிருக்கிறார். அத்தண்டனை பற்றி உலக நாடுகள் பலவும் தமது விமர்சனத்தைத் தெரிவித்திருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக சவூதிய நீதிமன்றத்தை விமர்சித்திருக்கின்றன.
அல் ஷெஹாப்புக்குக் கடுமையான தண்டனை கிடைக்கக் காரணம் அவர் ஒரு ஷீயா முஸ்லீம் மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலாக இருக்கலாம் என்று சில அமைப்புகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்