ஜெர்மனி வழியான எரிவாயுக்குளாயை மூடிவிட்ட ரஷ்யா ஹங்கேரிக்கான விற்பனையை அதிகரித்திருக்கிறது.
ரஷ்யாவுடன் தாம் செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின்படி ஏற்கனவே அங்கிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவை விட அதிகமான அளவு கொள்வனவு செய்யவிருப்பதாக ஹங்கேரி அறிவித்தது. அதன் மூலம் தமது நாட்டில் வரவிருக்கும் குளிர்காலத்துக்கு வேண்டிய எரிசக்திக்குத் தட்டுப்பாடில்லாமல் செய்துவிட்டதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புதன்கிழமையன்று வந்த செய்திகளின்படி நோர்ட்ஸ்டிரீம் 1 மூலமாக ஜெர்மனிக்குக் கொடுத்துவந்த எரிவாயுவை ரஷ்யா நிறுத்திவிட்டது. அதன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பதாகச் செய்திருந்த உடன்படிக்கையில் 20 % ஐயே ரஷ்யா சமீப வாரங்களில் வழங்கிவந்தது. அதையும் முற்றாக நிறுத்தியிருக்கிறது.
அதேசமயம் ஹங்கேரிக்கு விற்கப்போகும் எரிவாயுவின் அளவு தினசரி 5.8 பில்லியன் கியூபிக் மீற்றரால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஷர்த்தோ தெரிவித்தார். செர்பியாவின் வழியே இருக்கும் எரிவாயுக்குளாய் இணைப்பு மூலம் அது கொடுக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்