கத்திக்குத்துக் கொலைகளால் ஒரு கனடிய மாகாணத்தையே நடுங்கவைத்திருக்கும் இருவரைப் பொலீசார் தேடிவருகிறார்கள்.
கனடாவின் [Saskatchewan] சஸ்கச்சேவன் மாகாணத்து மக்கள் பயத்தில் உறையவைத்திருக்கிறார்கள் டேமியன், மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர். கருப்பு நிறக் காரொன்றில் பயணித்து மாகாணத்தின் பல இடங்களில் கத்தியால் குத்தி இதுவரை 10 பேரைக் கொன்றிருக்கிறார்கள். மேலும் 15 பேர் இரத்தக்காயங்களுடன் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள்.
பழங்குடிமக்கள் வாழும் பகுதிகளிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த இருவரே பல மணி நேரமாக வெவ்வேறு இடங்களில் கொலைகளைச் செய்திருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளின் தாயார் உட்படப் பலரைக் கொலை செய்த அவர்களைத் தேடி வலை விரித்திருக்கும் பொலீசார் பொதுமக்கள் எவரையும் அவர்களைத் தொடர்பு கொள்ளவேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் சிலர் குறிவைத்துக் கொல்லப்பட்டதாகவும் மற்றவர்களைக் கொலைகார்கள் எவரென்று கவனிக்காமலேயே தாக்கியதாகவும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
கொலைகளில் ஈடுபட்டு வருகிறவர்களில் ஒரு இளைஞன் சில மாதங்களாகவே பொலீசாரால் தேடப்பட்டு வருகிறான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் என்னவென்பதைப் பொலீசார் தெரிவிக்கவில்லை. உள்ளூர் பழங்குடி மக்களின் தலைவர்கள் தெரிவித்திருக்கும் விபரங்களிலிருந்து பின்னணி போதை மருந்து வியாபாரம் பற்றியது என்று சந்தேகிக்கப்படுகிறது.
நடந்துவரும் கத்திக்குத்துக் கொலைகள் கனடாவின் தற்காலச் சரித்திரத்தில் மிகவும் கொடூரமானவைகளில் ஒன்றாகும். 2020 இல் நோவா ஸ்கொட்டியா மாநிலத்தில் பொலீஸ் உடையணிந்த ஒருவன் துப்பாக்கிச்சூடுகளிலும், தீ வைப்பதிலும் ஈடுபட்டான். அவனது தாக்குதல்களில் 16 பேர் சுமார் 13 மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்.சஸ்கச்சேவனில் முதலாவது கொலைத்தாக்குதல் பற்றி காலை ஆறு மணிக்கே பொலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்