வறிய நாடுகளுக்கான தானியங்களை மேற்கு நாடுகள் வறுகியெடுத்துக்கொண்டன என்கிறார் புத்தின்.
விளாடிவோஸ்டொக் நகரில் நடந்துகொண்டிருக்கும் கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாடு [Eastern Economic Forum] என்ற அமைப்பின் ஏழாவது சந்திப்பில் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது உரையில் மேற்கு நாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவைகளில் ஒன்று உக்ரேன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதிக்குச் சென்ற தானியக் கப்பல்கள் பெரும்பாலும் மேற்கு நாடுகளுக்கே சென்றன என்பதாகும்.
“எங்கள் மீது போடப்பட்டிருக்கும் முடக்கங்களால் எமக்கு இலாபங்களே கிடைத்தன. அவற்றில் அதிமுக்கியமானது நாம் எமது நாட்டின் இறையாண்மையைப் பலப்படுத்தியிருப்பதாகும். நாம் காண்பது மேற்கு நாடுகள் செய்யும் இன்னொரு வெட்கம்கெட்ட மோசடியாகும். உக்ரேனிலிருந்து தானியங்களுடன் சென்ற கப்பல்களில் இரண்டு மட்டுமே ஆபிரிக்காவின் வறிய நாடுகளுக்குப் போயிருக்கின்றன. மற்றவையெல்லாமே ஐரோப்பிய நாடுகளுக்கே சென்றன,” என்று சாடினார் புத்தின். ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடுவது போல ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் எரிபொருட்களுக்கு விலை மட்டுப்பாடு செய்தால் ஐரோப்பியர்களு அவற்றை விற்காமல் வரவிருக்கும் பனிக்காலத்தில் உறையவிடுவேன் என்றும் அவர் கூறினார்.
“உக்ரேனிலிருந்து சென்ற தானியக் கப்பல்கள் எல்லாமே ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படியே குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்றன,” உடனடியாக உக்ரேன் பதிலளித்திருக்கிறது.
ஐ.நா-வினால் வெளியிடப்பட்ட விபரங்களின்படி உக்ரேன் துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பல்களில் பெரும்பாலானவை துருக்கிக்கே சென்றன. அதைத் தவிர சீனா, இந்தியா, எகிப்து, சோமாலியா, யேமன், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றன.
குறிப்பிட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த துருக்கிய ஜனாதிபதியுடன் உக்ரேனின் தானிய ஏற்றுமதி பற்றித் தான் உரையாடவிருப்பதாகவும் புத்தின் தெரிவித்தார். அப்பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தத்தின்படி தானியக் கப்பல்கள் எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்பதை வரையறுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
சாள்ஸ் ஜெ. போமன்