கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் எல்லையில் இரு தரப்பாருக்கும் இடையே மோதல்.
மத்திய ஆசிய நாடுகளான கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் இரண்டுமே ரஷ்யாவின் ஆதரவு நாடுகளாகும். உஸ்பெக்கிஸ்தானில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நேரடியாக வரும் நாட்களில் சந்திக்கவிருக்கிறார்கள் இவ்விரு நாட்டின் தலைவர்களும். நட்பு நாடுகளாகச் சித்தரிக்கப்படும் இவ்விரண்டு நாடுகளுமிடையே நீண்ட காலமாகவே இருந்து வரும் எல்லை வரையறுப்புப் பிரச்சினைகளால் கடந்த வருடத்தில் பல தடவைகள் மோதல்கள் நடந்திருக்கின்றன.
கிரிகிஸ்தான் நாட்டின் எல்லைப்படைகள் தமது எல்லைப் படையினரை நோக்கித் துப்பாக்கிச்சூடுகளை நடத்தியதாக தாஜிக்கிஸ்தான் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது. ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் அது குறிப்பிடுகிறது. ரஷ்யாவின் இராணுவத் தளங்களைக் கொண்டிருக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமார் 1,000 கி.மீ எல்லை இருக்கிறது. அதில் பெரும்பகுதி பற்றிய சர்ச்சைகள் இரண்டு நாடுகளுக்குமிடையே தொடர்கின்றன.
சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு வெளியே புறப்பட்டிருக்கும் ஷீ யின்பிங் தனது சர்வதேச பாதுகாப்புக் கோட்பாடுகளை நிறைவேற்ற மத்திய ஆசியக் குடியரசுகளையே பெரிதும் நம்பியிருக்கிறார். மேற்கு நாடுகளுடைய அரசியல் தொடர்புகள் கோட்பாட்டுக்கு எதிராக அவர் இந்த நாடுகளை ஒன்றுதிரட்டி ரஷ்யாவுடன் சேர்ந்து ஒரு அணியை உண்டாக்குவதில் ஈடுபட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்