ரஷ்ய ஆயுதங்களாலான தனது பாதுகாப்பு அமைப்பை அடியோடு மாற்றவேண்டிய நிலையில் கிரீஸ்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் முழுசாக எதிர்த்து வருவதற்கான விலையை வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வகையில் செலுத்துகின்றன. கிரீஸ் தனது ஆயுதங்களில் கணிசமான பகுதியை ரஷ்யாவிடமே வாங்கிவந்தது. அரசியல் நிலைமை மாறியிருப்பதால் நாட்டின் பாதுகாப்புக்கான திட்டங்களையே முழுவதுமாக மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

கிரீஸ் பாதுகாப்பு அமைப்பை மாற்றி நாட்டோ ஒன்றியத்தின் ஆயுதப் பாதுகாப்புத் திட்டத்துக்கு இணங்கக்கூடிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும்படி அமெரிக்காவிடமிருந்து பிரேரிக்கப்பட்டிருக்கிறது. வான்வெளிப் பாதுகாப்பு S-300,  Tor-M1 ஆகியவற்றைக் கிரீஸ் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. பதிலாக அமெரிக்கா தனது இராணுவ உதவித் திட்டம் மூலம் கிரீஸுக்கு அதற்குப் பதிலான தனது தயாரிப்புக்களைக் கொடுக்க முன்வருகிறது.

கிரீஸிடம் இருக்கும் அல்லது கிரீஸ் கைவிடத் தயாராக இருக்கும் ஆயுதங்களைத் தரும்படி உக்ரேன் வேண்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், ரஷ்யாவிடம் கிரீஸ் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தப்படி ஆயுதங்களை மூன்றாவது நாட்டுக்கு ரஷ்ய அனுமதியின்றி விற்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. 

கிரீஸ் அரசு எடுக்கவிருக்கும் முடிவு அனேகமாக அமெரிக்கா பிரேரித்திருப்பது போலவே இருக்கும் என்று இராணுவப் பாதுகாப்பு அவதானிகள் கணிக்கிறார்கள். விரைவில் இரு பகுதியாரும் இதுபற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஆரம்பிப்பார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *