டொனால்ட் டிரம்ப், மற்றும அவரது பிள்ளைகள் மீது பொருளாதார மோசடிக் குற்றங்கள் நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் வழக்காகியிருக்கின்றன.
நியூ யோர்க்கில் மான்ஹட்டன் நகர நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் வழக்கொன்றில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பும் அவரது நிறுவனமும் பல ஏமாற்று வேலைகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வழக்கில் டொனால்ட் டிரம்ப் மட்டுமன்றி அவரது வயதுக்கு வந்த பிள்ளைகளும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள். நியூ யோர்க் நகர அரச வழக்கறிஞர் லடீட்ஸா ஜேம்ஸ் மூன்று வருடங்களாக டிரம்ப் நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களைப் பற்றி ஆராய்ந்த பின்னரே இவ்வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்.
டிரம்ப் தனது கட்டட நிறுவனத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய பொய்யான விபரங்களைக் காட்டிக் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்றதாகவும், வரிகளைக் குறைவாகச் செலுத்தியதாகவும் அரச வழக்கறிஞர் தனது விசாரணைகள் மூலம் விபரிக்கிறார்.
அரச வழக்கறிஞர் ஒரு டெமொகிரடிக் கட்சிக்காரர் என்றும் அவர் தன் மீது அபாண்டமான பழிகளை அரசியல் காரணங்களுக்காகச் சுமத்துவதாகவும் அதுபற்றி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். தானோ தனது நிறுவனமோ எந்தவிதத் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டதில்லை என்று அவர் தெரிவித்து வருகிறார். குறிப்பிட்ட வழக்குக்காக டிரம்ப் அவரது பிள்ளைகள் விசாரிக்கப்பட்டபோது அவர்கள் பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்திருக்கிறார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபர் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகள் தனது நிலைமைக்குப் பாதகம் விளைவிக்கலாம் எனும் பட்சத்தில் பதிலளிக்க மறுக்கலாம்.
குறிப்பிட்ட மோசடி வழக்குகளில் டிரம்ப் நிறுவனத்தின் முன்னாள் பொருளாதார அதிகாரி அரசுக்காக உதவி வருகிறார். டிரம்ப் நிறுவனத்துக்காகத் தான் பொய்யான கணக்குவழக்குகளைத் தயாரித்ததாக அவர் விசாரணைகளில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்