போருக்குப் போகக்கூடிய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை உத்தரவு போட்டது ரஷ்யா.
செப்டெம்பர் 21 ம் திகதி காலை ரஷ்யாவின் ஜனாதிபதி தனது நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியைப் போருக்குத் தயார்செய்யும்படி பணித்தார். அதையடுத்து போருக்கு அனுப்பப்படக்கூடும் என்ற பயத்தில் ஒரு சாரார் குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பியோடி வருகிறார்கள். இன்னொரு சாரார் தமது எதிர்ப்பை வெவ்வேறு வழியில் காட்டி வருகிறார்கள். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பொலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து நாட்டின் இராணுவச் சேவையில் ஈடுபடும் வயதுள்ள ஆண்கள் எவரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கலாகாது என்ற சட்டத்தை வரும் நாட்களில் புத்தின் அறிவிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அந்த நடைமுறை ஏற்கனவே செயற்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் சமூகவலைத்தளங்கள் மூலம் விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
நில எல்லையுள்ள நாடான பின்லாந்தின் எல்லையின் ஊடாக வெள்ளிக்கிழமை மட்டும் 7,000 ரஷ்யர்கள் தமது நாட்டுக்குள் வந்ததாகப் பின்லாந்து செய்தி வெளியிட்டிருக்கிறது. தமது நாட்டுக்குள் சுற்றுலா விசாவுடன் ரஷ்யர்கள் நுழைவதைப் பெருமளவில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவிக்கிறது. ரஷ்யர்கள் பலர் தொடர்ந்தும் வெளியேறும் இன்னொரு எல்லை துருக்கியாகும். அங்கேயும் சமீப நாட்களில் ரஷ்யர்கள் பெருமளவில் வந்திறங்குவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதேசமயத்தில் உக்ரேனிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து ரஷ்யர்களின் கைவசப்படுத்தப்பட்ட பிராந்தியங்களான லுகான்ஸ்க், டொனெஸ்க் குடியரசுகளின் பெரும்பகுதியில் அம்மக்கள் எந்த நாட்டுடன் இணைய விரும்புகிறார்கள் என்ற வாக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. செப்டெம்பர் 27 ம் திகதி வரை நடக்கப்போகும் அந்த வாக்கெடுப்புகளை சட்டத்துக்கெதிரானவை என்று அமெரிக்க அதிபர் உட்படப் பல உலகத் தலைவர்கள் நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்தில் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். அச்சபையில் பங்கெடுக்கும் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் அது அந்தப் பகுதி மக்களின் விருப்பத்த்தைத் தெரிந்துகொள்வதற்கான வாக்களிப்பு என்று தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்