சிறீலங்கா மீது ஏழு நாடுகள் ஐ.நா பொதுச்சபையில் வைக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு வலுக்கிறது.
இந்த வாரமும் தொடரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் சிறீலங்காவின் மீது ஏழு நாடுகள் ஒன்றிணைந்து முன்வைத்திருக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. அந்தத் தீர்மானம் மனித உரிமைகளுக்கான ஐ.நா-வின் உயர்மட்டம் சிறீலங்கா அரசு குறிப்பிட்ட சில கோரிக்கைகளை வைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
போருக்குப் பின்னர் சமூகங்களிடையே நல்லிணக்கம் உண்டாக்குவதற்காக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து அதற்கான பொறுப்புக்கூறலை அரசு ஏற்கவேண்டும் என்கிறது. மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்களின் விளைவுகளால் மனித உரிமைகள் மீதான தாக்கம் பற்றியும் கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு கோருகிறது. மனித உரிமைகள் பேரவையின் ஐம்பத்து மூன்றாவது அமர்வு மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது அமர்வுகளில் வாய்மொழிப் புதுப்பிப்புகளையும், அதன் ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ புதுப்பிப்பு மற்றும் அதன் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மேலதிக தெரிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அலுவலகம் கோரப்பட்டுள்ளது. 2024 இல் ஐம்பத்தி ஏழாவது அமர்வு, இரண்டும் ஒரு ஊடாடும் உரையாடலின் பின்னணியில் விவாதிக்கப்படும்.
கொவிட் 19 சிறீலங்காவின் மீது ஏற்படுத்திய பாதிப்பு, அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு போன்றவையையும் அதனால் பிரத்தியேகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் மீதான பாதிப்பு போன்றவையையும் மேற்கண்ட தீர்மானம் கவனிக்கிறது.
ஏப்ரல் 2022 இல் சிறீலங்காவில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின்போது அமைதியாகத் தமது எதிர்ப்பைக் காட்டியவர்கள் மீதும், அரசுக்கு ஆதரவாக இருந்தார்கள் மீதும் ஏவிவிடப்பட்ட வன்முறை பற்றியும் கூட வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கும் தீர்மானம் சுட்டிக் காட்டாமலில்லை. அச்சமயத்தில் பல தரப்பாரும் கைது செய்யப்பட்டார்கள், கொலைகள் நடந்தன. அவற்றின் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், கனடா, ஜேர்மனி உட்பட்ட ஏழு நாடுகளால் வரையப்பட்ட தீர்மானத்துக்கு டென்மார்க், சுவீடன், நோர்வே, துருக்கி, அல்பானியா, ஆஸ்ரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், லத்வியா போன்ற மேலும் பல நாடுகள் தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்