உலகின் மிகப் பெரிய கிறீஸ்தவ தேவாலயம் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது.

வத்திக்கானிலிருக்கும் புனித பேதுரு ஆலயமே தற்போது உலகின் மிகவும் பெரிய தேவாலயமாகும். அதைவிட சுமார் 810 சதுர மீற்றர் பரந்த நிலப்பரப்பில் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் கட்டப்படவிருக்கிறது உலகின் மிகப் பெரிய தேவாலயம். செர்ச்சிப் மாவட்டத்தின் தென்ஸால் [Thenzawl] என்ற நகரத்திலேயே அந்தத் தேவாலயம் கட்டியெழுப்பப்பவவிருப்பதாக ஒரு கிறீஸ்தவ அமைப்பினர் அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே 2016 இல் மிஸோராமில் ஒரு தேவாலயத்தைக் கட்டியெழுப்பிய பாதிரியார் சச்சாவா லௌண்டோ என்பவரே [“Zofate Pathian Biakinpui”] மிஸோக்களின் மாபெரும் தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தின் விபரங்களை அறிவித்தார். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான யாக்கோபின் மகன்களில் ஒருவரான யோசப்பின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று தம்மை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.   

உலகமெங்கும் வாழும் ஸபோதே இனத்தவருக்குச் சொந்தமானதாக அத்தேவாலயம் அமையும். அந்த இனத்தவர் கிறிஸ்தவத்தின் எந்தப் பிரிவில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் கட்டப்படவிருக்கும் தேவாலயத்தைத் தமது வழிபாடுகளுக்கும், பிராந்திய, தேசிய அளவிலான மதம் சம்பந்தப்பட்ட பொதுக்கூட்டங்களுக்கும் பயன்படுத்தலாம்.

அதன் நீள, அகலம் தலா 240 அடியாகவும், உயரம் 177 அடியாகவும் இருக்கும். தேவாலயத்தின் மொத்தப் பிராந்தியம் 70,000 பேரை உட்கொள்ளக்கூடியதாக இருக்கும். 30,000 இருக்கைகள் தேவாலயத்துக்குள் அமைக்கப்படும். தீர்க்கதரிசி யாக்கோபின் 12 பிள்ளைகளை ஞாபகப்படுத்த அத்தேவாலயம் 12 அறைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறைக்கும் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படும்.  

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *