தொடர்ந்தும் தனது நிறுவனம் தொலைத்தொடர்புகளைக் உக்ரேனுக்குக் கொடுக்க இயலாது என்கிறார் மஸ்க்.
சமீப வாரங்களில் உக்ரேன் – ரஷ்யா, சீனா – தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்களில் பலரால் விரும்பப்படாத கருத்துக்களை ஏலொன் மஸ்க் டுவீட்டியிருந்தார். உக்ரேன் தான் இழந்த பகுதிகளை ரஷ்யாவிடம் கொடுத்துவிட்டுச் சமாதானம் ஏற்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும், தாய்வான் தனது ஆளுமையின் மீது சீனாவுக்கும் இடங்கொடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் உக்ரேன், தாய்வான் அரசியல்வாதிகள் மட்டுமன்று உலகெங்குமிருந்தும் மஸ்க் மீது எதிர்க்கருத்து ஏவுகணைகள் தொடுக்கப்பட்டன.
உக்ரேன் மீதான ரஷ்யப் போர் ஆரம்பித்தவுடன் உக்ரேனின் தொலைத்தொடர்புகள் மீது குறிவைத்து ரஷ்யா தாக்கியது. உக்ரேனின் 15 விகிதமான தொலைத்தொடர்புகள் ரஷ்யாவால் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், உக்ரேன் இராணுவத்தினருக்கு இடையேயான தொலைத்தொடர்புகள், பொதுமக்களின் தொலைத்தொடர்புகள் பாதிக்கப்பட்டன. அச்சமயத்தில் டெஸ்லா நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான, உலகின் மிகப்பெரும் பணக்காரரான ஏலொன் மஸ்க் உக்ரேனுக்குக் கைகொடுத்தார்.
தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலம் உக்ரேனுக்குத் தேவையான தொலைத்தொடர்புகளை ஏற்படுத்த வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுத்தார் ஏலொன் மஸ்க். அதன் மூலம் உக்ரேன் தொலைத்தொடர்புகளை ரஷ்யா இடைமறித்துக் கண்காணிப்பதும் கஷ்டமாகியது. அத்தொடர்புகளுக்காக இதுவரை 80 மில்லியன் டொலர்கள் செலவாகியிருப்பதாக ஏலொன் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
“ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் உக்ரேனுக்காக 100 மில்லியன் டொலர்களைச் செலவிட்டிருக்கும். அதைத் தொடர்ந்தும் செய்வது எங்களால் இயலாத காரியமாகிக்கொண்டிருகிறது,” என்று அவ்வுதவியை நிறுத்திவிடப் போவதாக மஸ்க் குறிப்பிட்டார்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ், உக்ரேனுக்கு உதவும் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்க அரசிடம் அவர் கோரியிருக்கிறார். அச்செலவுகள் அடுத்த வருடத்தில் 400 மில்லியன் டொலர்களைத் தொடும் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடமிருந்து உதவிக் கோரிக்கை வந்திருப்பதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தாம் உக்ரேனுக்குத் தொடர்ந்தும் உதவ ஆர்வத்துடனிருப்பதாகக் குறிப்பிடும் அமெரிக்கா தொலைத்தொடர்புகள் பற்றிய முடிவுகளை இன்னும் எடுக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்