உக்ரேனுக்குக் கவசவாகனங்களைக் கொடுப்பதில் இழுத்தடிக்கும் ஜேர்மனி.
ரஷ்யாவின் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே உக்ரேனுக்குப் போர் புரிவதற்கான ஆயுதங்களைக் கொடுக்கலாமா என்ற கேள்வி ஜேர்மனியில் கொதித்து ஆவியாகிப் பறக்கிறது. முதல் கட்டத்தில் இராணுவ உடைகளையும், தலைக்கவசங்களையும் மட்டுமே உக்ரேனுக்குக் கொடுத்து மற்றைய ஐரோப்பிய நாடுகளின் நகைப்புக்கு ஆளாகிய ஜேர்மனி படிப்படியாகத் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறது.
ஜேர்மனிய அரசாங்கக் கூட்டணிக்குள் பலமான சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் கேள்விகளில் ஒன்று உக்ரேனுக்கு பாரதூரமான ஆயுதங்களைக் கொடுக்கலாமா என்பதாகும். உக்ரேனுக்கு ஜேர்மனி பீரங்கிகளுடனான கவசவாகனங்களைத் தருவதாகச் சமீபத்தில் உறுதிகொடுத்திருந்தது. குறிப்பிட்ட அந்த கவசவாகனங்கள் அனுப்புவதற்குத் தயாராக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திட்டமிட்ட காலவரையறைக்குள் உக்ரேனுக்கு அனுப்பப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக உக்ரேனிய இராணுவம் தாம் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களைத் தாக்கி வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. அவர்களுடைய வெற்றிகள் தொடர்வதற்கு ரஷ்ய இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடிய பலமான ஆயுதங்கள் அவசியம் என்று இராணுவப்போர் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அதற்கு அவசியமாக இருக்கும் கவசவாகனங்கள் போன்றவையை ஜேர்மனி உறுதிகொடுத்துவிட்டு அனுப்பாதிருத்தல், இழுத்தடித்தல் உக்ரேனுக்குப் பாதகமாகலாம்.
உறுதி கொடுக்கப்பட்ட ஜேர்மனியத் தயாரிப்புகளான Leopard 1, 2, மற்றும் Marder கவசவாகனங்களை ஜேர்மனியிடமிருந்து எதிர்பார்த்திருக்கிறது உக்ரேன். ஜேர்மனிய அரசிலிருக்கும் கூட்டணியின் லிபரல் கட்சி, சூழல் ஆதரவுக் கட்சி ஆகியவை விரைவாக உக்ரேனுக்குப் போருக்கான ஆயுதங்களைக் கொடுக்கவேண்டும் என்கின்றன. கூட்டணின் பெரிய கட்சியான பிரதமரின் சோஷியல் டெமொகிரடிக் கட்சியினரோ முடிந்தவரை அதை இழுத்தடிக்க முயல்கின்றது.
உக்ரேனுக்குப் பாரதூரமான ஆயுதங்களைக் கொடுப்பதன் மூலம் போரின் உக்கிரம் மேலும் அதிகமாகலாம் என்று பயப்படுகிறார் ஜேர்மனியப் பிரதமர் ஒலொவ் ஷொல்ட்ஸ். போரின் உக்கிரத்தை அதிகரிக்க உதவுதல் ஒரு கட்டத்தில் அதை ஒரு அணு ஆயுதப் போராக மாற்றிப் பெரும் அழிவை ஐரோப்பாவுக்கே உண்டாக்கலாம் என்கிறார்கள் ஷோஷியல் டெமொகிரடிக் கட்சியினர் பலர்.
அதேசமயம் ஜேர்மனியின் ஜனாதிபதி பிரான்க் வால்டர் ஸ்டெய்ன்மெயர் உக்ரேனுக்குத் திடீர் விஜயம் செய்திருக்கிறார். முதல் தடவையாக அங்கே விஜயம் செய்திருக்கும் அவர் ஜேர்மனி போர்க்காலத்தில் மட்டுமன்றி எதிர்காலத்தில் உக்ரேனைக் கட்டியெழுப்ப உதவும் என்று உறுதிகொடுத்தார். உக்ரேன் மீது ரஷ்யா செய்துவரும் வான்வெளித் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய அவர் அவைகளிலிருந்து உக்ரேன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொடுப்பது தற்போது மிக அவசரமானது என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்