தனது பங்குக்கு 0.11 விகிதமே நச்சுக்காற்றை வெளியிடும் மங்கோலியா நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கிறது.
காலநிலை மாற்றத்தைத் தடுக்க முற்படும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் நிலக்கரிப் பாவிப்பை, ஏற்றுமதியை நிறுத்தி வருகின்றன. நிலக்கரி எரிசக்தி மையங்களைக் கட்ட வங்கிகளும் கடன் கொடுப்பதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டன. இந்த நிலையில் சீனாவின் தொழிற்சாலைகள் தங்களுடைய தேவைக்கான எரிசக்தியின்றித் தவிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கனவே, தனது பொருளாதாரத்தின் முக்கிய பங்கை வகிக்கும் நிலக்கரியைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் மங்கோலியா தனது தயாரிப்பையும் சீனா ஏற்றுமதியையும் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.
தனது நாட்டின் ஏற்றுமதியில் 86 % ஐ சீனாவுக்கே ஏற்றுமதி செய்கிறது மங்கோலியா. அதில் பாதிக்கும் அதிகமானது நிலக்கரி ஏற்றுமதியாகும். 3.3 மில்லியன் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட மங்கோலியா தன் பங்குக்கு நிலக்கரியை அதிகம் பாவிப்பதில்லை, காரணம் அங்கே தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததே. அதிக வளர்ச்சியும் இல்லாத நாடான மங்கோலியா தனது நிலக்கரி ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கு வேண்டிய போக்குவரத்து வசதிகளும் இல்லாத நாடாகவே இருந்து வருகிறது.
2060 இன் பின்னர் நச்சுக்காற்றை வெளியிடுவதை நிறுத்தும் குறிக்கோளைக் கொண்டிருக்கும் சீனா காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கும் வரட்சியால் தனக்குத் தேவையான எரிசக்தியைத் தயாரிக்க முடியாமல் தவித்து வருகிறது.
ஆஸ்ரேலியாவிலிருந்தே பெருமளவு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது சீனா. ஆஸ்ரேலியா உடனடியாக நிலக்கரித் தயாரிப்பையும், ஏற்றுமதியையும் நிறுத்தாவிட்டாலும் படிப்படியாக அதை நிறுத்தவிருக்கிறது. நாட்டின் பெரும்பங்கு நிலக்கரித் தயாரிப்பாளரான குவீன்ஸ்லாந்து மாநிலம் 2035 இல் நச்சுவாயு வெளியிடலை நிறுத்துவது என்று குறிப்பிட்டு நிலக்கரிச் சுரங்கங்களைப் படிப்படியாக மூடிவிடத் திட்டமிட்டிருக்கிறது.
ஆஸ்ரேலியாவின் திட்டம் மங்கோலியாவின் நிலக்கரி ஏற்றுமதிக்கான தேவையை அதிகரித்திருக்கிறது. மட்டுமில்லாமல் நிலக்கரியின் விலையும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. சீனா அங்கிருந்து கொள்வனவு செய்யும் நிலக்கரியின் அளவைப் பெருமளவில் உயர்த்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே இவ்வருட முதல் ஒன்பது மாதங்களில் மங்கோலியாவின் நிலக்கரி ஏற்றுமதியின் பெறுமதி மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
சந்தர்ப்பம் இருக்கும்போது தமது நிலக்கரி ஏற்றுமதியைப் பெருமளவில் தோண்டி விற்றுவிடவும் அதன் மூலம் நாட்டின் சுபீட்சத்தை உயர்த்தவும் மங்கோலியா திட்டமிட்டுச் செயற்படுகிறது. வரும் 10 வருடங்களில் தனது சீனாவுக்கான நிலக்கரி ஏற்றுமதியை உயர்த்துவதற்கான வகையில் நாட்டின் போக்குவரத்துச் சங்கிலிப் பலப்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் மங்கோலியாவின் நிலக்கரிச் சுரங்க மையமான தவான் தொல்கொயிலிருந்து சீனாவின் எல்லைவரை சுமார் 233 கி.மீ நீளமான ரயில் பாதையையும் கட்டி வருகிறது. அந்தப் பாதை மூலம் வருடத்துக்கு 30- – 50 மில்லியன் தொன் நிலக்கரியைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. அந்தப் பாதையைப் பாவிப்பதன் மூலம் பாரவண்டிகளில் நிலக்கரியைக் கொண்டு செல்வதை விட நாலிலொரு மடங்காகச் செலவையும் குறைக்கிறது மங்கோலியா.
சாள்ஸ் ஜெ. போமன்