விலையேற்றத்தை எதிர்பார்த்து ஐரோப்பியக் கடலில் காத்து நிற்கும் திரவ எரிவாயுக் கப்பல்கள்.
ரஷ்யாவிடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் குறைத்துக் கொண்டதால் திரவ எரிவாயுவை ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. திடீரென்று ரஷ்யா தான் கொடுத்துவந்த எரிவாயுவையும் நிறுத்திவிட்டதால் ஐரோப்பாவில் அதன் விலைகள் என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் அதிக விலையில் திரவ எரிவாயுவுடன் ஐரோப்பாவை நோக்கிப் பல கப்பல்கள் வந்தன. ஆனால், செப்டெம்பர் மாதக் கடைசியிலிருந்து எரிவாயு விலை ஐரோப்பியச் சந்தையில் தடாலென்று விழ ஆரம்பித்து விட்டது.
எரிவாயுவைப் பெருமளவில் கொள்வனவு செய்யும் ஜேர்மனி தனக்குக் குளிர்காலத்துக்குத் தேவையான எரிவாயுவைக் தேக்கங்களில் நிறைத்துக் கொண்டது. ஐரோப்பாவெங்கும் வழக்கத்துக்கு மாறாக வெப்பமான காலநிலையே தொடர்கிறது. தெற்கு ஐரோப்பாவில் தொடர்ந்தும் கோடைகால வெப்ப நிலையே நிலவுகிறது. அதனால், ஐரோப்பிய நாடுகள் பயந்தது போல எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
சுமார் 2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான எரிவாயுவைத் தங்கள் கொள்கலங்களில் ஏற்றியபடி சுமார் 30 கப்பல்கள் ஐபீரியத் தீபகற்பத்துக்கு வெளியே காத்திருக்கின்றன. அவைகளைத் தேக்கும் துறைமுகங்களிலும் இடமில்லை அத்துடன் தற்போதைய குறைந்த விலைக்கு அவற்றை விற்கக் எரிவாயு நிறுவனங்களும் தயாராக இல்லை என்று குறிப்பிடப்படுகிறது.
குளிர்காலத்தின் பிற்பாதியில் மீண்டும் ஐரோப்பாவில் எரிசக்தியின் விலை உயர்ந்து, எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அங்கலாய்ப்புடன் அந்த 30 கப்பல்களும் காத்திருக்கின்றன. மேலும் 30 கப்பல்கள் எரிவாயுவுடன் ஐரோப்பாவை நோக்கி விரைவில் பயணிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்