சிரியப் போராளிகளிடம் மாட்டிக்கொண்ட ஐரோப்பாவெங்கும் தேடப்படும் பெரும் குற்றவாளி.
சர்வதேசப் பொலீஸ் அமைப்பான இண்டர்போலின், பெரிதும் தேடப்படுகிறவர்கள் பட்டியியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் போதை மருந்துக் கடத்தல்காரன் ஒருவனை சிரியாவில் அரசுக்கெதிராகப் போராடும் குழுவொன்று கைது செய்திருக்கிறது. சிரிய ஜனாதிபதி அல் – ஆசாத் கட்டுப்பாட்டிலிருக்கும் பிராந்தியத்துக்குள் நுழைய முற்படும்போது தடுக்கப்பட்ட புரூனோ கார்போனே இத்தாலிக்குத் திருப்பியனுப்பப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
நேப்பிள்ஸ் கப்பெல்லோ கரடெட்டி மாபியா கும்பலைச் சேர்ந்தவர் கார்போனே. கொகெய்ன் கடத்துவதில் ஈடுபட்டு 20 வருடத்துக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கார்போனே 2003 ம் ஆண்டு முதல் தலைமறைவாகவே வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹயாத் தஹ்ரீர் அல் ஷம் என்ற ஜிகாதி குழுவினர் அப்பகுதியில் போலி ரோலெக்ஸ் கடிகாரங்களை விற்றதாக கார்போனேயைக் கைப்பற்றினார்கள். தன்னை ஒரு மெக்சிகோ நாட்டவராகக் கூறிய கார்போனே எவரென்று அறிந்துகொள்ள அவரைப் படங்கள் எடுத்து டெலிகிராம் சமூகவலைத்தளத்தில் அக்குழுவினர் பரப்பியிருந்தார்கள்.
கார்போனே எவரென்று அறிந்துகொண்டதும் தாம் இத்தாலியுடன் தொடர்புகொண்டு அங்கே அனுப்பியதாக அக்குழுவினர் குறிப்பிடுகிறார்கள். இத்தாலிய அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில் கார்போனே டுபாய்க்குள் நுழைய முற்பட்டு அனுமதிக்கப்படாமல் இத்தாலிக்கு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்