ஜாவா தீவில் பூமியதிர்ச்சி, நூற்றுக்கணக்கில் மரணங்கள். தொடர்ந்தும் சில பாதிக்கப்பட்ட பாகங்களுடன் தொடர்பில்லை.
ஒரு வாரத்துக்கு முன்னர் உலகத் தலைவர்களின் வரவால் கோலாகலமாக இருந்த ஜாவா தீவு இவ்வாரம் இயற்கையின் துக்ககரமான தாக்குதலொன்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது. 21 ம் திகதி திங்களன்று பகலில் ஜாவா தீவின் மேற்குப் பகுதியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. மாலையில் வெளிவந்த செய்திகளின்படி சுமார் 162 பேர் இறந்திருப்பதாகவும் நூற்றுக்கணக்கானோரின் இருப்பு பற்றிய விபரங்களெதுவும் இதுவரை தெரியவில்லை என்று தெரியவருகிறது.
ஏற்பட்ட பூமியதிர்ச்சி சமீபகாலத்தில் அங்கே ஏற்பட்ட பூதியதிர்ச்சிகளைப் போல மோசமானதாக இல்லாவிடினும் அதன் மையம் நிலமட்டத்துக்கு மிக அதிக ஆழத்தில் இல்லாததால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தீப்பெட்டிகள் போல மடிந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. போக்குவரத்து வழிகள் பல இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டதால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றுடனான தொடர்பு திங்களன்று மாலையிலும் இல்லாமலே இருப்பதாக மீட்புப்படைகள் தெரிவித்தன.
இடிபாடுகளிடையே காணாமல் போயிருப்பவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாக மீட்புப் படையினரும், உதவிக்கு வந்திருக்கும் பொதுமக்களும் குறிப்பிடுகிறார்கள். அதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தார். பாதிக்கப்பட்டோருக்கு சகல உதவிகளையும் தருவதாக நாட்டின் ஜனாதிபதி அறிவித்தார்.
பசுபிக் சமுத்திரத்தின் கரையோரங்களிலிருக்கும் ஆசிய நாடுகளைக் கொண்ட பூமித்தட்டுக்குக்கீழே பல எரிமலைகள் செயற்படுகின்றன. தீப்பிளம்புகளின் வளையம் என்றழைக்கப்படும் அப்பகுதிகளிலிருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் பூகம்பங்களும், சுனாமிகளும் ஏற்படுவது வழக்கமாகும்.
சாள்ஸ் ஜெ.போமன்