கத்தாரில் சாதனை நிகழ்த்திய ஒலிவர் ஜிரூட். பிரான்ஸ் அரையிறுதியைத் தொட்டார் கத்தாருக்கு வருவார் மக்ரோன்.
செவ்வாயன்று கத்தாரில் நடந்த உதைபந்தாட்ட மோதல்களில் பெரும்பாலானோரில் கவனத்தைக் கவர்ந்தது சவூதி அரேபியாவின் வெற்றி. அதற்கிணையாகப் பேசப்படுகிறது பிரான்ஸ் தனது எதிர்ப்பக்கத்தில் நின்ற ஆஸ்ரேலியாவுடன் விளையாடிய திறமையும், பெற்ற 4 – 1 வெற்றியும்.
ஆரம்பத்திலேயே ஒரு கோலைப் போட்டு ஆஸ்ரேலியா எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதிக நேரமாகவில்லை பிரான்ஸ் அணி அதை 1 – 1 ஆக்க. இரண்டாவதை ஆஸ்ரேலியாவின் வலைக்குள் போட்டவர் 36 வயதான ஒலிவியர் ஜிரூட் [Olivier Giroud]. ஒரு சில வாரங்களுக்கு முன்னர் காயமடைந்ததால் பிரான்ஸின் நட்சத்திரப் படைக்குள் பலரும் எதிர்பார்த்த கரீம் பென்சிமா இடம்பெறவில்லை.
ஜிரூட் இரண்டாவது பாதி விளையாட்டில் 4 – 1 என்ற இலக்கத்தில் தனது அணிக்கு வெற்றியைச் சம்பாதித்தார். அதன் மூலம் அவர் பிரான்ஸ் தேசிய அணிக்காக அதிக கோல்கள் போட்டவர் என்ற சாதனையைச் செய்தார். 51 கோல்களைப் போட்டதன் மூலம் இதுவரை அந்த இடத்திலிருந்த தியரி ஆன்ரியை அவர் பின்னுக்குத் தள்ளினார்.
விளையாட்டுகளில் அதீத ஆர்வமுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேசிய அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மனித உரிமைகள் மீறல்களுக்காகப் பலராலும் இகழப்படும் கத்தாரில் தமது அணி அரையிறுதிப் போட்டியை எட்டுமானால் தான் அங்கே வருவதாகத் தெரிவித்திருக்கிறார் மக்ரோன். அதற்காகப் பலரும் அவரை விமர்சித்தபோது, “அரசியலை விளையாட்டுக்குள் புகுத்தலாகாது,” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்