அலையலையாகத் தாக்கிய அமெரிக்க அணியிடம் திக்குமுக்காடிய இங்கிலாந்து அணி.
வெள்ளிக்கிழமையன்று கடைசியாக நடந்த உலகக்கிண்ணத்துக்கான மோதலில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் பங்குபற்றின. தனது முதலாவது மோதலில் ஈரானை மண் கவ்வ வைத்த இங்கிலாந்திடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்ததை அவர்களால் கொடுக்க இயலவில்லை. ஆரம்பக் கட்டத்தில் அதிக நேரம் பந்தைத் தம்மிடம் வைத்து விளையாடிய இங்கிலாந்து அணியினர் நேரம் போகப்போக அமெரிக்க அணியிடம் திணறியது அப்பட்டமாகத் தெரிந்தது.
இங்கிலாந்து அணியை நோக்கி ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அணியின் திட்டமிட்டும் மேலாளர் கரி சௌத்கேட் மீதும் கடுமையாக விமர்சனக்கணைகள் விழுகின்றன. அவர் அணியின் திறமையான வீரர்களில் ஒருவரான பில் பூடனை மைதானத்துக்குள் அனுப்பாதது பற்றியும் விமர்சனங்கள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்க அணியினர் மீண்டும் மீண்டும் இங்கிலாந்தின் அரணுக்குள் நுழைந்து தாக்கிக்கொண்டேயிருந்தார்கள். கிரிஸ்டியான் புலிசிச், வெஸ்டன் மக்கென்னி ஆகிய அமெரிக்க வீரர்கள் வலைக்குள் பந்தை அடிப்பதில் மயிரிழையில் தவறினார்கள். மிகவும் சுறுசுறுப்பாக சுழன்று விளையாடிக்கொண்டிருந்த அமெரிக்க அணியாலும் இங்கிலாந்தின் வலைக்குள் பந்தைப் போட இயலவில்லை. எவருக்கும் வெற்றிதோல்வியின்றி மோதல் முடிவடைந்தாலும் அமெரிக்க அணியினர் பார்வையாளர்களைக் கவர்ந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்