இம்ரான் கானை அவரது கட்சித் தலைமையிலிருந்து வெளியேற்றும் நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கிறது.
பாகிஸ்தான் பிரதமராக தஹ்ரீக் ஏ இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான் கானை அந்தப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்திடம் கோரியிருக்கும் தேர்தல் ஆணையத்தின் வழக்கு விசாரணை செவ்வாயன்று ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை நீதிமன்றம் இம்ரான் கானுக்கு அனுப்பியிருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் வெளி நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அந்தந்த நாடுகளில் பெற்றுக்கொள்ளும் பரிசுப் பொருட்கள் அரச சொத்தாகவே கணிக்கப்படுகின்றன. அவைகளைப் பிரதமர் நாட்டின் அதிகாரத்திடம் ஒப்படைக்கவேண்டும். அந்தப் பரிசுகள் அரசின் கைவசம் இருக்கும் கண்காட்சியில் சேர்க்கப்படும் என்பதே வழக்கம். தனக்கும் தனது மனைவிக்கும் அப்படியாகக் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகளைக் கான் தனதாக்கிக்கொண்டார். முன்னாள் பிரதமர்களால் நாட்டின் பரிசுக் கஜானாவில் பாதுகாக்கப்பட்ட விலையுயர்ந்த பல பரிசுகளையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி விற்பனை செய்து அப்பணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
அவற்றைத் திருப்பித் தரும்படி அரசு கேட்டுக்கொண்டபோது. அவை தனது பரிசுகள் தன் இஷ்டம் என்று அவர் கூறிவிட்டார். சுமார் 108 மில்லியன் ரூபாய்கள் மதிப்புள்ள பரிசுகளுக்கு 21.5 மில்லியன் ரூபாய்களை அவர் செலுத்தியிருப்பதாக அரசு விபரங்களை வெளியிட்டிருக்கிறது.
தன்மீது தேர்தல் ஆணையம் நடத்தவிருக்கும் விசாரணையை நிறுத்தவேண்டும் என்று கோரி கான், லாஹூர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்